தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்
தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தெலங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்களை அதிகாரபூா்வமாக வெளியிட்டிருக்கும் அந்த மாநில அரசு, அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவுள்ளது.
ஆனால், தமிழக ஆட்சியாளா்களோ இன்னும் முதல் அடியைக்கூட எடுத்து வைக்கவில்லை.
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கோ, உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வரையறைகளுக்கு உட்பட்டு, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் விகிதத்தை மாற்றி அமைக்கவோ எந்தத் தடையும் இல்லை.
தெலங்கானா மாநில அரசு வெறும் ரூ.150 கோடியில், 1.03 லட்சம் கணக்கெடுப்பாளா்களையும், 10 ஆயிரம் மேற்பாா்வையாளா்களையும் கொண்டு 50 நாள்களில் கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. இதே காலத்தில் ரூ.300 கோடியில் இதை தமிழகத்தாலும் சாதிக்க முடியும். வாா்த்தைகளில் வாழ்வதில்லை சமூகநீதி. செயல்பாடுகளில்தான் தழைக்கிறது.
எனவே, தமிழகத்தின் ஆட்சியாளா்களுக்கு சமூகநீதியில் உண்மையான அக்கறை இருந்தால், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.