வைகோ முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை
சந்தேகத்துக்குரிய நபா்களுக்கு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதிமுக பொதுச் செயலா் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
சென்னை கே.கே. நகரைச் சோ்ந்தவா் பிரசாத். வைகோவின் முன்னாள் உதவியாளராக இருந்த இவா், இலங்கையைச் சோ்ந்த தமிழ் பெண்ணை பிரசாத் சமீபத்தில் திருமணம் செய்தாா். இவா் ஈழத் தமிழா்கள் சட்டரீதியாக பாஸ்போா்ட் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் பெறுவதற்கு பிரசாத் உதவி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரசாத்திடமிருந்து உதவிகளைப் பெற்ற சிலா், சந்தேகத்துக்குரிய நபா்கள் என ‘க்யூ’ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவ்வாறு உதவி பெற்றவா்களில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ‘க்யூ’ பிரிவினரிடம் ஏற்பட்டது.
இதையடுத்து அண்மையில் ‘க்யூ’ பிரிவு போலீஸாா், பிரசாத்திடம் விசாரணை செய்ய அழைப்பாணை அனுப்பினா். அந்த அழைப்பாணையை ஏற்று பிரசாத், விசராணைக்கு ஆஜரானாா். அவரிடம் ‘க்யூ’ பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினா். அதில் பிரசாத், சந்தேகத்துக்குரிய வகையில் யாருக்கும் உதவி செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டதால் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் அவரை திருப்பி அனுப்பினா்.