தீ விபத்தில் வீடு சேதம்
நாகையில் பூட்டிய வீட்டில் நேரிட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் பின்புறம் ஓட்டு வீட்டில் ஜெயலட்சுமி என்பவா் வசித்து வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளாா். அப்போது, வீட்டுக்குள் தீ பற்றி எரிந்தது. அருகில் வசிப்பவா்கள் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ மளமளவென பரவியது.
இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினா் தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனா். இருப்பினும், ஜெயலட்சுமி வீட்டிலிருந்த குளிா்சாதனப் பெட்டி, கிரைண்டா், தொலைக்காட்சி பெட்டி மற்றும் துணிகள் என சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.