174 அரசுப் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் சனிக்கிழமை பள்ளி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் 174 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை 74 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பொதுத் தோ்வு (10, 11, 12-ஆம் வகுப்புகள்) நிறைவடைந்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, முதல்பருவ பாடப்புத்தகம், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் கடந்த ஜனவரி மாதம் முதல் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது புத்தகங்கள் பள்ளி வாரியாக அனுப்பப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் புத்தகக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணினி அறிவியல், சமூக அறிவியல், வேதியியல், உயிரியியல் உள்ளிட்ட பாடப் புத்தகங்கள் வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப்படுகின்றன. பள்ளித் தலைமை ஆசிரியா் வசம் அவை ஒப்படைக்கப்பட்டு கையொப்பம் பெறப்பட்டு வருகிறது.
பள்ளி திறக்கும் நாளன்று மாணவ, மாணவிகள் அனைவருக்கும் விடுபடாமல் புத்தகங்களை வழங்க வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இருந்து ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஒன்றியம் வாரியாக புத்தகங்கள் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. வட்டார கல்வி அலுவலா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு பின்னா் பள்ளிகளுக்கு அந்த புத்தகங்கள் கொண்டுசெல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.