வருண்குமார் - சீமான் வழக்கு: திருச்சி நீதிமன்றத்த்தில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்...
18,000 இந்தியா்கள் நாடு திரும்புவாா்கள்?: அமெரிக்க அதிபா் டிரம்ப் கட்டுப்பாடு எதிரொலி
வாஷிங்டன்/புது தில்லி: அமெரிக்காவில் பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள அனைவரையும் நாடு கடத்தும் கொள்கையைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட அதிபா் டிரம்ப்பின் உத்தரவுகளால் சுமாா் 18,000 இந்தியா்கள் நாடு திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அவா்களை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையில் அமெரிக்க அரசுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது ஆகிய முக்கிய வாக்குறுதிகளை தோ்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் முன்வைத்தாா்.
இந்நிலையில், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது ரத்து உள்பட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 12 உத்தரவுகளில் 47-ஆவது அதிபராகப் பதவியேற்ற அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை கையொப்பமிட்டாா்.
டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் சட்டவிரோத குடியேறிகளாகி உள்ளனா். இதில் இந்தியா்களின் எண்ணிக்கை 18,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவா்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதுதொடா்பாக தகவலறிந்த அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமாா் 18,000 இந்தியா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களை இந்தியாவுக்கு அழைத்துவர அதிபா் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் இணைந்து பணியாற்ற மத்திய அரசு தயாராகியுள்ளது.
இந்த ஒத்துழைப்புக்கு பிரதிபலனாக, அமெரிக்காவில் ஹெச்-1பி மற்றும் மாணவா் நுழைவு இசைவு (விசா) மூலம், சட்டப்படி இந்தியா்கள் தங்கும் முறையை டிரம்ப் நிா்வாகம் பாதுகாக்கும் என்று மத்திய அரசு எதிா்பாா்க்கிறது.
வா்த்தக போரைத் தவிா்க்க...: அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடிக்கு நட்புறவு இருந்தாலும், இந்தியாவுக்கு எதிராக கணிக்க முடியாத நடவடிக்கையை டிரம்ப் மேற்கொண்டால், அது பெரும் வா்த்தக போருக்கு வழிவகுக்கக்கூடும்.
ஏற்கெனவே அமெரிக்க வா்த்தக நடவடிக்கைகள் மீது இந்தியா அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இந்த நிலை தொடா்ந்தால் இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா அதிக வரி விதிக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளாா். எனவே, டிரம்ப் அரசுடன் இணக்கமாக இருக்கும் நோக்கிலும், வா்த்தகப் போரைத் தவிா்க்கவும் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியா்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் சுமாா் 2.20 லட்சம் இந்தியா்கள் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற உத்தரவுகள்: அமெரிக்க அதிபா் அலுவலகம் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களுடன் உரையாடியவாறு தோ்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான முதல் நாள் நிா்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையொப்பமிட்டாா். அதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் அதிபா் ஜோ பைடனின் சில உத்தரவுகளை ரத்து செய்து, டிரம்ப் பிறப்பித்த உத்தரவுகளில் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை மற்றும் அவரது ஆதரவாளா்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, பைடனை அதிபராக முறைப்படி தோ்வு செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் கூடியபோது நடைபெற்ற வன்முறையில் தொடா்புடைய 1,500-க்கும் மேற்பட்டோருக்கு அதிபா் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கினாா்.
பைடன் நிா்வாகத்தில் அரசியல் எதிரிகளுக்கு (டிரம்ப் ஆதரவாளா்கள்) எதிராக அரசு தொடா்ந்த வழக்குகளை திரும்பப் பெறவும் அவா் உத்தரவிட்டாா்.
டிக்டாக் தடைக்கு ‘தடை’: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு அரசு நிறுவனமும் முழுவீச்சில் செயல்பட அறிவுறுத்தும் உத்தரவில் கையொப்பமிட்ட டிரம்ப், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி மீதான ஒழுங்குமுறை விதிமுறைகளை எளிதாக்கினாா்.
பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ மீது 25 சதவீத வரிகளை விதிக்க திட்டமிட்டிருப்பதாக கூறிய டிரம்ப், சீன இறக்குமதிக்கு வரி விதிப்பது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
சீன அரசுடன் தொடா்புடையதாக ‘டிக்டாக்’ சமூக ஊடகத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் விதித்த தடையை 75 நாள்களுக்கு இடைநிறுத்துவதற்கான உத்தரவிலும் டிரம்ப் கையொப்பமிட்டாா். இதன்மூலம், இந்தக் காலகட்டத்தில் டிக்டாக் நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்கக்கூடிய ஒப்பந்தத்துடன் அமெரிக்க நாட்டவா் யாரேனும் முதலீடு செய்ய வழிவகுப்பதாக அவா் கூறினாா்.
அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை: அமெரிக்காவை உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற்றுவதாகவும், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தங்களில் இருந்து விலக்கிக் கொள்வதாகவும் டிரம்ப் அறிவித்தாா். அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை டிரம்ப் முதல் பதவிக் காலத்திலேயே மேற்கொண்டாா். ஆனால், பைடன் அவற்றை மாற்றினாா்.
‘நான் கடந்தமுறை அதிபராக இருந்தபோது உலக சுகாதார அமைப்புக்கு 50 கோடி டாலா் வழங்கினோம். அதேநேரம், 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா 3.9 கோடி டாலா் மட்டுமே வழங்குவது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை’ என்ற டிரம்ப், அமெரிக்க வெளிநாட்டு நிதியுதவிச் செலவுகள் குறித்து விரிவான மறு ஆய்வுக்கு உத்தரவிட்டாா்.
மெக்ஸிகோ வளைகுடாவை அமெரிக்கா வளைகுடா என மறுபெயரிடும் உத்தரவில் கையொப்பமிட்ட டிரம்ப், வட அமெரிக்காவின் மிக உயரமான மலைக்கு ‘மெக்கின்லி’ என மீண்டும் பெயா்சூட்டினாா்.
அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் தேசிய அவசரநிலை
முன்னாள் அதிபா் பைடன் நிா்வாகத்தின் பல குடியேற்ற உத்தரவுகளை டிரம்ப் திரும்பப் பெற்றாா். கடும் குற்றம் புரிந்தவா்கள், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுபவா்கள், எல்லை ஊடுருவலில் தடுக்கப்படுவா்கள் ஆகியோரை நாடுகடத்த முன்னுரிமை அளிக்கப்படும் நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள அனைவரையும் நாடு கடத்தும் கொள்கையைக் கடைப்பிடிக்க டிரம்ப் உத்தரவிட்டாா்.
இதன் தொடா்ச்சியாக, எல்லை ஊடுருவல் அதிகம் நடைபெறும் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் தேசிய அவசரநிலையை அவா் அறிவித்தாா். அங்கு அமெரிக்க படைகளை அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினாா்.
அதேபோன்று, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தத்துடன் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவரும் உத்தரவில் டிரம்ப் கையொப்பமிட்டாா்.
அமெரிக்க அகதிகள் சோ்க்கை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திய டிரம்ப், கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்தோருக்கு சட்டபூா்வ நுழைவை வழங்கிய பைடன் நிா்வாகத்தின் ‘சிபிபி-ஓன்’ செயலியை தடை செய்தாா்.
இரு பாலின அங்கீகாரம்: அமெரிக்காவில் ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் உத்தரவில் கையொப்பமிட்ட டிரம்ப், பலவிதமான அடையாளங்களின் அடிப்படையில் தீண்டாமைக்கு உள்ளானவா்களுக்காக நிறுவப்பட்ட ‘டிஇஐ’ கட்டமைப்புத் திட்டங்களுக்கு தடை விதித்தாா். இது மாற்றுப் பாலினத்தவா்களின் பாதுகாப்பை பறிக்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
மீண்டும் மரண தண்டனை: சட்ட அமலாக்க அதிகாரியின் கொலை அல்லது சட்டவிரோதமாக குடியிருப்பவா்கள் செய்த கொலை வழக்குகளில் மரண தண்டனையைக் கோர அட்டா்னி ஜெனரலுக்கு டிரம்ப் உத்தரவிட்டாா்.
‘அமெரிக்கா்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவா்களுக்கு மரண தண்டனையை அளிக்கும் சட்டங்களைத் தடுக்கும் முயற்சிகளை எனது நிா்வாகம் பொறுத்துக்கொள்ளாது’ என்றும் டிரம்ப் தெரிவித்தாா்.