கோலிக்கு அறிவுரை கூற ரிக்கி பாண்டிங்கிற்கு தகுதியில்லை..! இந்திய ரசிகர்கள் ஆவேஷம...
``+2 மாணவர்களே... வழக்கறிஞர் ஆக வேண்டுமா?" - நீங்கள் செய்ய வேண்டியது...
மருத்துவம், இன்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளின் மீது எந்த அளவுக்கு மாணவர்களுக்கு ஆர்வம் உள்ளதோ, அதே அளவுக்கான ஆர்வம் சட்டப்படிப்பின் மீதும் உள்ளது. இப்படி மாணவர்கள் இந்தப் படிப்பை விரும்புவதற்கு சமூக மரியாதை மற்றும் நல்ல வருமானமும் முக்கிய காரணங்கள்.
சட்டப்படிப்பு படிக்க என்ன செய்ய வேண்டும்?
தேசிய பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிக்க சேர வேண்டுமானால், 'Common Law Admission Test' என்று சொல்லப்படும் 'CLAT' தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வை Consortium of National Law Universities நடத்துகிறது. இந்தத் தேர்வு எழுதுவதன் மூலம் இந்திய அளவில் செயல்பட்டுவரும் 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து சட்டம் படிக்கலாம்.
யார் படிக்கலாம்?
இதற்கு வயது உச்ச வரம்பு கிடையாது. 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவிகித மதிப்பெண்களாவது கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இந்த மதிப்பெண்களில் சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை என்ன?
இது ஒரு ஆப்லைன் தேர்வு ஆகும். இந்தத் தேர்வில் மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும். இவை ஆங்கிலம், பொது அறிவு, நடப்புகள், லாஜிக்கல்ல் ரீசனிங், லீகல் ஆப்டிட்யூட் போன்றவற்றை உள்ளடக்கி இருக்கும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் தாங்கள் விரும்பும் சட்டக்கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம். இது தவிர, தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்குக்கூட இந்த மதிப்பெண்ணைப் பயன்படுத்தலாம்.
என்னென்ன வேலைவாய்ப்புகள் உண்டு?
சட்டம் படித்துவிட்டு நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றலாம். தனியார் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர் ஆகலாம். அரசு, தனியார் வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பு அதிகாரி (சட்டம்) போன்ற பணிகளில் சேர முடியும்.
தேர்வு எப்பொழுது?
இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜூலை மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வு அடுத்த நவம்பர் மாதம் நடக்கலாம்.
இந்த அறிவிப்புகள் குறித்து consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.