சல்மான் கான் : கொலை மிரட்டலுக்கு மத்தியில் பிறந்தநாள் பார்ட்டி... அணிவகுத்த பிரபலங்கள், தோழிகள்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 59வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். இப்பிறந்தநாள் விழாவில் சல்மான் கானின் சகோதரர் சோஹைல் கான், அவரின் மகன் நிர்வான் கான், சல்மான் கானின் முன்னாள் காதலி சங்கீதா பிஜ்லானி, தற்போதைய காதலி யூலியா வந்தூர், துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மகன் ஜீசான் சித்திக், உடற்பயிற்சியாளர் யாஷ்மின் கராச்சிவாலா ஆகியோரும் கலந்து கொண்டானர்.
சமீபத்தில் தங்களது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கானின் மற்றொரு சகோதரர் அர்பாஸ் கான் மற்றும் அவரது மனைவி ஷுரா கான், சல்மான் கானின் சகோதரி அர்பிதா , கணவர் ஆயூஷ் சர்மா ஆகியோரும் சல்மான் கான் பிறந்தநாளில் கலந்து கொண்டனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இசையமைப்பாளர் சாஜித் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவ்விழாவில் நடிகர் ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியா தேஷ்முக் மற்றும் அவர்களது மகன்கள், நடிகர் பாபி தியோல் உட்பட பலரும் கலந்து கொண்டனர். நள்ளிரவில் நடந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு சல்மான் கான் பலத்த பாதுகாப்புடன் ரேஞ்ச் ரோவர் காரில் வந்தார். அதிகாலை வரை பார்ட்டி நடந்தது. சல்மான் கான் தனது புதிய படமான சிகந்தரின் முதல் டீசரை பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டு இருந்தார். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை தொடர்ந்து முதல் டீசரை வெளியிடுவதை தள்ளி வைத்துள்ளார்.
பிறந்த நாள் விழாவிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சல்மான் கானுக்கு டெல்லியை சேர்ந்த மாஃபியா லாரன்ஸ் பிஷ்னோய் மூலம் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் எப்போதும் அதிக பாதுகாப்புடன் சல்மான் கான் வெளியில் வருவது வழக்கம்.