+2 மாணவர்களே! வரைதல், 3D அனிமேஷன் போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வமா? - செய்ய வேண்டியது இதுதான்!
சிறு வயதிலிருந்து வரைதல், வடிவமைத்தல், 3D மாடலிங், அனிமேஷன் போன்ற புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்தால், 'கட்டடக்கலை' தான் உங்களுக்கு ஏற்ற துறை என்றே சொல்லலாம்.
கட்டடக்கலை என்றால் என்ன?
கட்டடங்கள், கட்டமைப்புகள் போன்றவற்றை கலை மற்றும் அறிவியல் நுணுக்கங்களோடு வடிவமைப்பதை தமிழில் 'கட்டடக்கலை' என்றும், ஆங்கிலத்தில் 'ஆர்கிடெக்சர்' (Architecture) என்று கூறுகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் வீடு, நிறுவனம், ஹோட்டல் போன்றவற்றை அழகாகவும், நவீனமாகவும் வடிவமைக்க மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அதை செய்வதற்கு 'கட்டடக்கலை நிபுணர்கள்' தேவை. இதற்கான படிப்புதான் 'கட்டடக்கலை'.
என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன?
குடியிருப்பு, வணிக கட்டடங்கள் ஆகியவற்றைக் கட்டுதல், உள்துறை வடிவமைப்பு செய்தல் போன்ற தனியார் வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு துறையில் பார்த்தால் ரயில்வே துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனங்கள், பொதுப்பணித் துறைகளில், தொல்லியல் துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்தத் துறைக்கு தற்போது பெருகி வரும் டிமாண்டினால் சொந்த நிறுவனம்கூட தொடங்கலாம்.
என்ன தேர்வு?
இந்தத் துறையை அதாவது B.Arch படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், 'NATA (National Aptitude Test in Architecture)' தேர்விற்கு தயாராக தொடங்குங்கள். இந்த நுழைவு தேர்வை மத்திய அரசின் 'கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்' என்ற அமைப்பு நடத்துகிறது.
இந்தத் தேர்வு ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
தேர்வு எப்படி இருக்கும்?
இந்த தேர்வின் மொத்த மதிப்பெண் 200. இதில் 80 மதிப்பெண்களுக்கு வரையும் திறன் தேர்வு இருக்கும். மீதி 120 மதிப்பெண்களுக்கு கணிதம், டிசைன், பொது அறிவு ஆகியவற்றில் இருந்து கேள்வி கேட்கப்படும். இது ஒரு கணினி வழி தேர்வு ஆகும்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இந்தியாவில் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் ஆர்கிடெக்ட் படிப்பான பி.ஆர்க்.கில் சேர முடியும்.
தேர்வு தகுதிகள் என்ன?
பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும். இந்தப் பாடப்பிரிவுகளைக் கொண்ட மூன்று ஆண்டு டிப்ளமோ படித்தவர்களும் இந்தத் தேர்வில் கலந்துகொள்ளலாம். இந்தத் தேர்விற்கு கணிதப் பாடம் மிகவும் முக்கியம்.
குறிப்பு: NATA நுழைவு தேர்வை JEE ஆர்க்கிடெக்சர் நுழைவு தேர்வுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். JEE ஆர்க்கிடெக்சர் நுழைவு தேர்வு ஐஐடி-யில் ஆர்க்கிடெக்சர் படிப்பதற்கு மட்டுமே நடத்தப்படுகிறது.
தேர்வு எப்போது?
ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் நடைபெறலாம். ஏப்ரல் மாதத் தேர்விற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விவரங்களை www.nata.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.