20 லிட்டா் விஷ சாராயம் பறிமுதல்: முதியவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் 20 லிட்டா் விஷச் சாராயத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா். இதில், முதியவரை கைது செய்தனா்.
கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட வாரம் கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, இந்த கிராமத்தில் சாராயம் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், குள்ளன் மகன் ராமசாமியின் (55) விளைநிலத்தில் சோதனை மேற்கொண்டனா். இதில், 3,200 கிலோ வெல்லம் மற்றும் 20 லிட்டா் விஷ சாராயத்தை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா்.
மேலும், இதே கிராமத்தில் அண்ணாமலை மகன் அருள் (28) வீட்டிலிருந்து 1,250 கிலோ வெல்லத்தை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா். இதில், ராமசாமியை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய அருளை தேடி வருகின்றனா்.