"2006-ல் விஜயகாந்த் ஏற்படுத்தியதைவிட 2026-ல் விஜய் அதிக தாக்கம் ஏற்படுத்துவார்" - டிடிவி தினகரன்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த டி.டி.வி. தினகரன், இம்மாத (செப்டம்பர்) தொடக்கத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
அதன் பின்னர் யாருடன் கூட்டணி என்ற கேள்விகள் எழுந்து கொண்டிருந்த வேளையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "கூட்டணி அமைத்தால் என்ன தவறு" என்று டி.டி.வி. தினகரன் கூறியிருந்தார்.
இருப்பினும் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை டிசம்பரில் அறிவிப்பேன் என்று தொடர்ந்து டி.டி.வி. தினகரன் கூறி வருகிறார்.

இந்த நிலையில், சென்னையில் தாம்பரம் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதற்கு வருகை தந்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கூட்டணி நிலைப்பாடு குறித்தும், விஜய் குறித்தும் பேசிய டி.டி.வி. தினகரன், "எனக்குத் தெரிந்து நான்கு கூட்டணிகள் வர இருக்கின்றன.
தி.மு.க கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய் தலைமையில் கூட்டணி, சீமான் தலைமையில் கூட்டணி.
அ.ம.மு.க கூட்டணி நிலைப்பாட்டை டிசம்பரில் தெரிவிப்போம். எனக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாத என்பதால்தான் கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறினோம்.

2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதைவிட அதிகமான தாக்கம் 2026-ல் இருக்கக்கூடும்.
2006 தேர்தலில் தி.மு.க மைனாரிட்டி அரசு அமைத்தது. தி.மு.க-வுக்கு 50 தொகுதிகளிலும், அ.தி.மு.க-வுக்கு 70 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பாதித்திருந்தது.
அதேபோல அல்லது அதைவிட அதிகமாக இந்தத் தேர்தலில் த.வெ.க தாக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.