கேரள ஐயப்ப சங்கமம்: "கோயில் பணத்தை அரசு எடுத்துச் செல்வதாக பொய் பிரசாரம்" - பினராயி விஜயன் ஆவேசம்
கேரள மாநிலத்தில் சபரிமலை உள்ளிட்ட கோயில்களை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்கப்பட்டு 75-வது ஆண்டை முன்னிட்டு பம்பாவில் ஐயப்ப சங்கமம் மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டுக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தை தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் மேடையில் வாசித்தார். தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஐயப்ப சங்கமம் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
மாநாட்டைத் தொடங்கி வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "சபரிமலைக்குத் தனித்துவமான வரலாறு உண்டு. சபரி என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த தபஸ்வினி இங்கு சீதையைத் தேடிவந்த ராமனுக்காகக் காத்திருந்தார். அதனால்தான் இந்த இடத்துக்கு சபரிமலை எனப் பெயர் வந்தது. அனைவரும் பேதமின்றி வருகை தரும் இந்தத் தலத்தை வலுப்படுத்த வேண்டும்.
முன்பு கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள்தான் சபரிமலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். அதன் பிறகு பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்தார்கள். பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டமாக இங்கு வந்தார்கள்.
இப்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். பல சமயங்களில் பக்தர்கள் கடல் போன்று இங்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காகத்தான் திருவிதாங்கூர் தேவசம் கோடு சார்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

சிலர் இந்த மாநாட்டை முடக்க முயன்றனர். சுப்ரீம் கோர்ட் அந்த நடவடிக்கைகளை நிராகரித்தது. உண்மையான பக்தர்களைக் கண்டறிவது மிக எளிதானது. பகவத் கீதையின் 12-வது அத்தியாயத்தில் 13 முதல் 20 வரையிலான எட்டு ஸ்லோகங்களில் பக்தர்களின் பண்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன.
அதில் யாரையும் வெறுக்காமல், அனைவரிடமும் நட்பும், கருணையும் கொண்டவர்கள்தான் பக்தர்கள் எனக் கூறப்படுகிறது. 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' எனச் சரணம் விழித்துக் கொண்டு, கஷ்டப்பட்டு வனப்பாதை வழியாக பதினெட்டாம் படி ஏறி அங்குச் செல்லும் பக்தர்களை வரவேற்பது தத்துவமஸி என்ற உபநிஷத் மந்திரம் ஆகும்.
சாந்தோக்ய உபதேசத்தில் இந்த வசனத்தின் பொருள் 'நீ அதுவாக இருக்கிறாய்' என்பதாகும். நானும் நீயும் ஒன்றாக ஆகிறோம் என்று சொல்லும்போது நம்ம வேறு அல்ல என்பது அர்த்தமாகும்.
பிறரையும் நமக்குள் ஏற்றுக் கொள்ளும்போது வேற்றுமை இல்லாமல் ஆகிறது. அனைவரும் ஒன்று என்ற விழிப்புநிலை ஏற்படுகிறது. இதுதான் சபரிமலை வெளிப்படுத்தும் தத்துவமாகும்.

பலரும் கோயில்களை பக்தர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்கிறார்கள். முன்பு பக்தர்கள் வசம் கோயிலிருந்தபோது பராமரிப்பு இல்லாமல் இருந்ததால்தான் அரசு தலையிட வேண்டும் என்று பக்தர்கள் சமூகத்திலிருந்து கோரிக்கை எழுந்தது.
அதைத் தொடர்ந்துதான் தேவசம் போர்டுகள் உருவாக்கப்பட்டன. அதன் மூலம் பல கோயில்கள் புனரமைக்கப்பட்டன. கோயில் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் கோயில்களின் செயல்பாடுகள் முடங்கின. அப்போது 140 கோடி ரூபாய் நிதி உதவி அரசு தேவசம்போர்டுகளுக்கு வழங்கியது.
அதே சமயம் கோயில் வருமானத்தில் ஒரு பைசா கூட அரசு எடுப்பதில்லை. இந்த அரசு 2016 முதல் 2025-ம் ஆண்டு வரை தேவசம்போர்டு அமைப்புகளின் வளர்ச்சிக்காக 650 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
திருவிதாங்கூர் தேசம் போர்டுக்கு 145 கோடி ரூபாய், கொச்சின் தேவசம் போர்டுக்கு 26 கோடி ரூபாய், மலபார் தேசம் போர்டுக்கு 95 கோடி ரூபாய், கூடல்மாணிக்கம் தேவசம் போர்டுக்கு 4 கோடி ரூபாய், தேவசம் ரெக்ரூட்மெண்ட் போர்டு 21 கோடி ரூபாய், ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலுக்கு மூன்றரை கோடி ரூபாய் என அரசு பணம் கொடுப்பதைப் பார்க்காதது போல் இருந்துவிட்டு, கோயில் பணத்தை அரசு எடுத்துச் செல்வதாகப் பொய் பிரசாரம் செய்கிறார்கள்" என்றார்.