விஜயகாந்தைவிட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்
விஜயகாந்த் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதைவிட அதிகமான தாக்கத்தை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் ஏற்படுத்துவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன், "சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 4 கூட்டணிகள் அமையவுள்ளன. திமுக, அதிமுக, சீமான், விஜய் என கூட்டணிகள் அமையும்.
எங்களது கட்சியின் நிலைபாட்டை டிசம்பர் மாதம் தெரிவிப்போம். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதைவிட அதிகமான தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார்.
உங்களின் கணிப்பைத்தாண்டி தவெகவின் தாக்கம் அதிகமாக இருக்கும். 2026 தேர்தலுக்குப் பிறகு, பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவிக்கு முடிவுரை எழுதப்படும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, பழைய அதிமுகவை உருவாக்கிட நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
புரட்சித்தலைவர் ஆரம்பித்த அதிமுக இன்றைக்கு இல்லை. தற்போது இருப்பது எடப்பாடி திராவிட முன்னேற்றக் கழகம்தான்” என்றார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் செப். 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!