மும்பை: '100 சிம் கார்டுகள், ஆபாச மெசேஜ், பொது இடத்தில் பாலியல் தொல்லை' - இளைஞருக்கு போலீஸ் வலை
சிலர் சோசியல் மீடியாவைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் சோசியல் மீடியாவில் வரக்கூடிய நட்பு கோரிக்கையை ஏற்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குநராக இருக்கும் அனீஷாவிற்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த செளரப் என்ற வாலிபருடன் சோசியல் மீடியா மூலம் அறிமுகம் ஏற்பட்டது.
ஆனால் அந்த நபர் அனீஷா காதலிப்பதாகச் சொன்னவுடன் அவருடனான தொடர்பை அனீஷா துண்டித்துக்கொண்டார். ஆனாலும் செளரப், அனீஷாவை விடவில்லை. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

அடிக்கடி ஆபாச மெசேஜ் அனுப்புவது அல்லது அனீஷாவின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து அங்கு அவரைப் பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
அனீஷா அந்த நபரின் போன் நம்பரை பிளாக் செய்த பிறகும் வேறு வேறு சிம்கார்டுகளைப் பயன்படுத்தி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.
ஆரம்பத்தில் அனீஷா இயக்குநராக இருக்கும் நிதி நிறுவனத்தில் டிமெட் கணக்கு திறக்கவேண்டும் என்று கூறி செளரவ் வந்தார். அதில் ஏற்பட்ட நட்பு இந்த அளவுக்குச் சிக்கலைக் கொண்டு வந்தது. அனீஷா வெளிநாடு சென்றாலும் கூட செளரப் அவருக்கு மெசேஜ் மற்றும் வீடியோ அனுப்பி சித்ரவதை செய்து வந்தார்.
விமான நிலையம், ஹோட்டலுக்குச் சென்றால் கூட அதைக் கண்காணித்து அங்கு நேரில் வந்து அனீஷாவிற்கு செளரப் பாலியல் தொல்லை கொடுத்தார். அவரின் தொடர் தொல்லை பொறுக்கமுடியாமல் அனீஷா, அவருக்கு எதிராக மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செளரப் 100 சிம்கார்டுகளைப் பயன்படுத்தி மெசேஜ் மற்றும் வீடியோ அனுப்பி இருந்தார். அனீஷாவின் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், டெலகிராம் மற்றும் அவரது போன் சிக்னலைப் பயன்படுத்தி நேரில் சென்று தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

கால் மற்றும் வீடியோ கால் செய்தும் தொல்லை கொடுத்து வந்தார். சில நேரங்களில் நள்ளிரவில் கூட இது போன்ற ஆபாச மெசேஜ்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
செளரப் எந்தெந்த நம்பரில் இருந்து மெசேஜ், கால், வீடியோ அனுப்பினார் என்ற விபரத்துடன் அனீஷா புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செளரப்பைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.