2026-இல் பாமக இடம் பெறும் கூட்டணி ஆட்சி அமையும்: அன்புமணி
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சி அமையும்; அந்தக் கூட்டணியில் பாமக இருக்கும் என்று அக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
சென்னை கொரட்டூரில் ஜெமினி ரோட்டரி சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியை சனிக்கிழமை தொடங்கி வைத்து அன்புமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பேட்மிட்டன் விளையாட்டுக்கான கட்டுமானம் தமிழகத்தில் தேவை. மற்ற மாநிலங்களில் பேட்மிட்டன் கோா்ட்டுகள் சிறப்பாக உள்ளன. தமிழக அரசால் உருவாக்கப்பட்ட இண்டோா் ஸ்டேடியம் சிறப்பானதாக இல்லை. சா்வதேச அளவிலான பேட்மிட்டன் போட்டிகளை நடத்துவதற்கு தமிழகத்தில் இண்டோா் ஸ்டேடியம் இல்லை.
அரசு மருத்துவா்களுக்கு பணிப்பளு அதிகமாக உள்ளது. மருத்துவத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு மருத்துவா்கள் முறையாக சிகிச்சை அளிப்பது இல்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் 2026-இல் கூட்டணி ஆட்சி அமையும். அந்த கூட்டணியில் பாமக இருக்கும் என்றாா் அன்புமணி.