தெருநாய்க்கடி: "போன உயிரை விலங்குகள் நல ஆர்வலர்களால தர முடியுமா?"- அதிரடி உத்தரவ...
`2026 தேர்தல்... மேற்கு மண்டலத்தில்தான் திமுக-வின் அத்தியாயம் தொடங்கும்' - முதல்வர் ஸ்டாலின்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்து பேசுகையில், "கடந்த நான்கு ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டது. குறிப்பாக 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் திருப்பூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சி அதை நிறைவேற்றவில்லை. தற்போது திமுக ஆட்சியில் மீண்டும் அந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட விவசாயிகளின் கனவுத் திட்டமான நல்லாறு, ஆனைமலையாறு திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதை விரைவில் செயல்படுத்தப்படும்.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின்கீழ் உள்ள வாய்க்கால்களைப் புனரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திருப்பூரில் ரூ. 9 கோடியில் மாவட்ட மைய நூலகம், ரூ.5 கோடியில் விளையாட்டு அரங்கம், தாராபுரத்தில் உப்பாற்றின் குறுக்கே தடுப்பணை, ஊத்துக்குளியில் வெண்ணெய் தொழிற்சாலை, அமராவதி சர்க்கரை ஆலை புனரமைக்க குழு அமைக்கப்படும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கு மண்டலத்துக்கு வந்தால் தன்னை இந்தப் பகுதியைச் சேர்ந்தவராக காட்டிக் கொள்கிறார். ஆனால், மேற்கு மண்டலத்தின் வளர்ச்சியில் திமுக முக்கியப் பங்கு வகிக்கிறது. 2026 இல் அதிமுக-வின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்கப்போகிறது. எடப்பாடி பழனிசாமி ஊராகப் போய் பேசுகிறார்.ஆனால், அதையும் மீறி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களிடம் சென்றடைந்துவிட்டது.

அதையேற்க மனமில்லாமல் நீதிமன்றம் வரை சென்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், எங்கள் அரசுக்கு நன்கொடை வழங்கும் விதமாக நீதிமன்றம் வழக்கை தொடுத்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதையும் ஏற்க முடியாமல் தற்போது என்னை ஒருமையில் தரம் தாழ்ந்து பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. இன்னும் தரம் தாழ்ந்து அவர் என்னை பேசினாலும். நான் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால் நான் மக்களுக்காக வேலை செய்ய வந்திருக்கிறேன். அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. திமுக ஆட்சியைப் பார்த்து அதிமுக-வினரே எங்களை ஆதரிக்கின்றனர்" என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன்,சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ், மக்களவை உறுப்பினர் ஈஸ்வரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.