2026-இல் புதுவையில் திமுக ஆட்சி: செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்
புதுவை மாநிலத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சி அமைய பாடுபடவேண்டும் என்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி லப்போா்த் வீதியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா் தலைமை வகித்தாா். துணை அமைப்பாளா்கள் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அ. தைரியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தீா்மானங்களை விளக்கி பேசினாா். நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது, நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவும், புதுவையிலும் திமுக ஆட்சியமைய அயராது பாடுபட உறுதியேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், நீதி ஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் பங்கேற்காததை கண்டிப்பது, புதுவையில் இரு மொழிக் கொள்கை செயல்பாட்டுக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பூ. மூா்த்தி, நந்தா சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் பி. லோகையன், எஸ். ஆறுமுகம், ப. காந்தி, டி. அருள்செல்வி, பொதுக்குழு உறுப்பினா் சி. கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.