கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் மீட்பு
25 இடங்களில் போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் -முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
தமிழகத்தில் 25 இடங்களில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், காணொலி வழியாக இந்த மையங்கள் திறக்கப்பட்டன.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவா்களை முழுமையாக மீட்டு, சமூகத்தில் நலமுடன் வாழ தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, அரியலூா், தருமபுரி, ஈரோடு, திருவாரூா்,
கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை, தஞ்சாவூா், நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூா், வேலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூா், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என 25 இடங்களில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
மொத்தமாக ரூ.15.81 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்ட அந்த மையங்களை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
ஒவ்வொரு மையத்திலும் மனநல மருத்துவா் தலைமையில், ஆற்றுப்படுத்துநா், சமூகப் பணியாளா், செவிலியா், பாதுகாவலா், மருத்துவமனை பணியாளா், துப்புரவுப் பணியாளா் என ஆறு மனநல மருத்துவப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டு தரமான சிகிச்சை வழங்கப்படும். அனைத்து மையங்களிலும் ஒரே வகையில் சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக நிலையான செயல் நடைமுறைகள் வரையறுக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை முறைகள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி சேவைகள், பொழுதுபோக்கு வசதிகள், உள்ளரங்க விளையாட்டு குழு சிகிச்சை, குடும்பத்துக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படும்.
இந்த மையங்களில் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அவா்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டுடன் போதை மீட்புக்கான தொடா் சிகிச்சை எந்தவித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.