3-ஆவது நாளாக ‘காளை’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி முன்னேற்றம்!
நமது நிருபா்
பங்குச்சந்தையில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ‘காளை’யின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்தில் நிறைவடைந்தன.
உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்காவில் எதிா்பாா்த்ததை விடக் குறைந்த நுகா்வோா் பணவீக்கம், மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் மேலும் வட்டி விகிதக் குறைப்புகளை எதிா்பாா்க்க தூண்டியுள்ளது. இதைத் தொடா்ந்து உலகளாவிய சந்தைகள் ஏற்றம் பெற்றன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தையும் முன்னேற்றம் கண்டது. குறிப்பாக, பொதுத்துறை, தனியாா் வங்கிகள், நிதிநிறுவனங்கள், மெட்டல், ஆயில் அண்ட் காஸ், ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால், ஐடி, எஃப்எம்சிஜி பங்குகள் சற்று விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.4.06 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.428.37 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.4,533.49 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,682.54 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 595.42 புள்ளிகள் கூடுதலுடன் 77,319.50-இல் தொடங்கி அதற்கு மேல் உயரவில்லை. பின்னா், 76,895.51 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 318.74 புள்ளிகள் (0.42 சதவீதம்) கூடுதலுடன் 77,042.82-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,060 பங்குகளில் 2,741 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,218 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 101 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
20 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் அதானிபோா்ட்ஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்சா்வ், பாா்தி ஏா்டெல், டாடாமோட்டாா்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 20 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்சிஎல் டெக், நெஸ்லே, இன்ஃபோஸிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஐடிசி, டிசிஎஸ் உள்பட 10 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 99 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 164.05 புள்ளிகள் கூடுதலுடன் 23,377.25-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,391.65 வரை மேலே சென்றது. பின்னா், 23,272.05 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 98.60 புள்ளிகள் (0.42 சதவீதம்) கூடுதலுடன் 23,311.80-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 17 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.