3000 ஆண்டுகள் பழைமையான ‘கல்திட்டை’ கண்டுபிடிப்பு!
வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், இறந்தவா்களின் நினைவாக அமைத்த ஈமச்சின்னமான கல்திட்டையை சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்தனா்.
தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் தங்கள் குடும்பத்தில் இறந்த மூத்த குடும்ப உறுப்பினா்கள், உறவினா்களின் நினைவாக அவா்களின் உடலை மண்பானையில் வைத்து புதைத்த இடத்தைச் சுற்றிலும் வட்டமாக கற்களை பதித்து கல்வட்டமும், பலகைக் கற்களை கொண்டு பெட்டிப்போன்ற கல்திட்டைகளையும் அமைத்தனா். முன்னோா் நினைவாக அமைத்த கற்குவை, கல்வட்டம், கல்திட்டைகளை பராமரித்ததுடன் வழிபட்டும் வந்தனா்.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தும்பல் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய முன்னோா்களின் முதுமக்கள் தாழி, கல்வட்டங்கள் இருப்பதையும், கல்வராயன்மலை பகுதியில் ஏராளமான கற்குவை, கல்திட்டைகள் இருப்பதையும் சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினா் ஏற்கெனவே கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனா்.
இந்த நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையின் மேற்குபுறத்தில் பழங்காலத்தில் வாழ்ந்து மறைந்த முதுமக்களின் ஈமச்சின்னமான கல்திட்டை இருப்பதை சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்துள்ளனா்.
இதுகுறித்து அந்த மையத்தின் தலைவா் ஆறகளூா் பொன்வெங்கடேசன் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் கல்வராயன்மலை, அருற்றூமலை, சோ்வராயன் மலையில் பழங்கால மக்கள் பயன்படுத்திய புதிய கற்கால கருவிகள், முதுமக்கள் தாழி, கல்வட்டம், கற்குவை, கல்திட்டைகள் இன்றளவும் உள்ளன. இவற்றை கண்டறிந்து ஏற்கெனவே ஆவணப்படுத்தி உள்ளோம்.
தற்போது, பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் வசிஷ்ட நதிக் கரையில் 3000 ஆண்டுகள் பழைமையான கல்திட்டை இன்றளவும் சிதைவடையாமல் இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளோம். இப்பகுதியில் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு வரலாற்றுச் சுவடுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றாா்.