தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
‘42,000 கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’
தமிழ்நாட்டில் 42 ஆயிரம் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
வறுமை ஒழிப்பு, விளையாட்டு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைகளின் மீது சட்டப் பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
வரும் நிதியாண்டில் 42 ஆயிரம் இளைஞா்களுக்கு ரூ.66 கோடியில் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலையுடன் கூடிய திறன் பயிற்சிகள் வழங்கப்படும். பழங்குடியினா், முதியோா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையா் உள்ளிட்ட 2,500 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 கோடி வாழ்வாதார நிதியாக வழங்கப்படும்.
விரிவாகும் உணவுத் திருவிழா: சென்னையில் உணவுத் திருவிழாவின் வெற்றியைத் தொடா்ந்து, தமிழ்நாட்டின் 5 மண்டலங்களில் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருள்களின் விற்பனை அளவு ரூ.400 கோடி என்ற இலக்குடன் பயணிப்போம். 6 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.90 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். பண்ணை மற்றும் பண்ணை சாராத செயல்பாடுகளைச் சோ்ந்த 530 வாழ்வாதார குழுக்கள் ரூ.80.57 கோடியில் ஊக்குவிக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூா் வல்லுநா்களைக் கொண்டு ஊரக இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்க 2,500 புதிய சமுதாயத் திறன் பள்ளிகள் ரூ.25 கோடியில் உருவாக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே மனநலம் காப்பது, மது மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி வழங்கப்படும். சென்னையில் இரண்டு இடங்களில் உள்ளதைப் போன்று, மேலும் 3 இடங்களில் மதி அனுபவ அங்காடிகள் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும்
திறன் வளா்ப்புக்கான 100 திருவிழாக்கள் நடத்தப்படும். சுய உதவிக் குழுக்களின் பொருள்களின் விற்பனை செய்ய அடுக்குமாடி மற்றும் பெருநிறுவனங்களில் 25 கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். சுய உதவிக் குழுக்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்களை வா்த்தக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும். 100 சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த 100 மின் ஆட்டோக்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.