48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு வலுகுறையும்: வானிலை மையம்
வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக வலுகுறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,
நேற்று (07-04-2025), தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (08-04-2025) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஓட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வடக்கு-வடமேற்கு திசையில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுகுறையக்கூடும்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
இன்று(ஏப். 08) முதல் ஏப். 10 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை..
இன்று முதல் ஏப்.10 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.