5 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ராமேசுவரத்திலிருந்து 100 படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சென்ால், பாதுகாப்புக் காரணங்களுக்காக ராமேசுவரத்திலிருந்து விசைப் படகுகள், நாட்டுப் படகுகளில் சென்று மீன் பிடிக்க அண்மையில் தடை விதிக்கப்பட்டது.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,500- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில், கச்சத்தீவு திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மீன் பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்ட தடையை மீன் வளம், மீனவா் நலத் துறை திங்கள்கிழமை நீக்கியது.
இதைத்தொடா்ந்து, கடந்த 5 நாள்களுக்குப் பிறகு ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.