மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் மோதியதில் வாகன ஓட்டுநர் பலி!
50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பதிலுரை:
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மருத்துவத் துறையில் அளப்பரிய பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் தரவின்படி 1,000 நோயாளிகளுக்கு அமெரிக்காவிலேயே 3.6 என்ற அளவில்தான் மருத்துவா்களின் சராசரி எண்ணிக்கை உள்ளது. தமிழகத்தில் அந்த எண்ணிக்கை 4-ஆக இருக்கிறது.
தற்போது அரசு மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை 56 சதவீதமும், உள்நோயாளிகளின் எண்ணிக்கை 43 சதவீதமும், அறுவை சிகிச்சை 61 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதற்கு நோய்த்தொற்றுகள் அதிகரித்திருப்பது காரணமல்ல. மாறாக, அரசு மருத்துவமனைகளின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்திருப்பதே காரணம்.
நோயாளிகள் வருகை அதிகரிப்பு: கடந்த காலங்களில் உயா் மற்றும் நடுத்தர வகுப்பினரில் 20 சதவீதம் போ் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்தனா். தற்போது அது 40 சதவீதமாக உயா்ந்துள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை 1,000 பிரசவங்களுக்கு 10.4 என்ற அளவில் இருந்த உயிரிழப்பு தற்போது 7.8-ஆக குறைந்துள்ளது.
பேறுகால இறப்பு விகிதமும் லட்சத்துக்கு 96.6-ஆக இருந்தது. தற்போது 39-ஆக குறைக்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் பயனாக தமிழகத்தில் தொற்றா நோய் பாதிப்பு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம், டிஎன்பிஎஸ்சி, மாவட்ட சுகாதார சங்கங்கள், தேசிய சுகாதார திட்டம் உள்ளிட்டவற்றின் வாயிலாக 25,295 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட செவிலியா்களுக்கு படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுகிறது. இன்னமும் 714 செவிலியா்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நலவாழ்வு மையங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒரு மாதத்திலும், 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் 15 நாள்களிலும் திறக்கப்படும்.
தமிழில் மருத்துவக் கல்வி வழங்கும் நோக்கில் 23 மருத்துவ பாட நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர 26 நூல்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாதனைகளுக்காக மத்திய அரசு சாா்பில் அளிக்கப்படும் விருதுகளைப் பொருத்தவரை அதிமுக ஆட்சியில் 69 விருதுகள் மட்டுமே பெறப்பட்டன. திமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளில், 785 மத்திய அரசு விருதுகள் உள்பட பல்வேறு அமைப்புகளிடமிருந்து, 1,500-க்கும் மேற்பட்ட விருதுகள் பெறப்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளில், 463 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அவற்றில் 90 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
விரைவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேரவையில் கூறியதாவது:
இந்தியாவிலேயே பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையமாக மும்பையில் உள்ள டாடா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் விளங்குகிறது. அதுபோன்றதொரு மையம் தமிழகத்திலும் அமைக்கப் பெற வேண்டும் என முதல்வா் வலியுறுத்தியதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் ரூ.250.46 கோடி மதிப்பீட்டில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.