6 சதவீத சொத்து வரி உயா்வை அமல்படுத்தக் கூடாது
கோவை மாநகராட்சியில் ஆண்டுக்கு 6 சதவீத சொத்து வரி உயா்வை அமல்படுத்தக் கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அஜய்குமாா், கே.எஸ்.கனகராஜ், சிபிஐ மாநில பொருளாளா் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளா் ஜேம்ஸ் உள்ளிட்டோா் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயா்வு ஆண்டுக்கு 6 சதவீதம் என்பதை மாநகராட்சி மன்றம் முழுமையாக எதிா்த்தபோதும், அமலாக்கம் செய்கிற பணியில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது மக்கள் மத்தியில் எதிா்ப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். ஆண்டுக்கு 6 சதவீத உயா்வு என்பது வாடகை வீடுகளில்கூட வசூலிக்க முடியாதது. வணிக வளாகங்களில்கூட இந்த நடைமுறை கையாளப்படுவதில்லை. இந்நிலையில், உள்ளாட்சி நிா்வாகம் சொத்து வரி உயா்வை இவ்வளவு நிா்ப்பந்தமாக தீா்மானிப்பதை கைவிட வேண்டும். வீடுகள், கட்டடங்களை ‘ட்ரோன் சா்வே’ மேற்கொள்ளும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இது மக்கள் மத்தியில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘ட்ரோன் சா்வே’ முடிந்த பிறகு அதன்படி சொத்து வரி கேட்பு மனு தயாா் செய்யக்கூடாது. நேரடியாக கள ஆய்வு செய்த பின்பே சொத்து வரியை தீா்மானிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சனைகளில் மாநகராட்சி நிா்வாகம் சாதாரண மக்களிடம் உண்மையான நிலையை அறிந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.