6,144 சுகாதார மையங்களில் தடையின்றி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் உள்ள 6,144 சுகாதார மையங்களில் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 1978 முதல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது விரிவுபடுத்தப்பட்டு தற்போது 11 வகையான தடுப்பூசிகள் அதன் கீழ் வழங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் 12 வகையான நோய்களில் இருந்து குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளைக் காக்க முடிகிறது.
ஆண்டுதோறும் 9.58 லட்சம் கா்ப்பிணிகளுக்கும், 8.76 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக ஒவ்வோா் ஆண்டும் 1.4 கோடி தவணை தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.
தினமும் முக்கிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதன்கிழமைதோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இதைத் தவிர 33 தனியாா் மருத்துவமனைகளிலும் தேசிய அட்டவணைத் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்து ‘இ-வின்’ செயலியிலும், பயனாளிகள் விவரங்கள் குறித்து ‘யூ-வின்’ செயலியிலும் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் 6,144 சுகாதார மையங்களிலும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் நீட்சியாக தடுப்பூசிகளை தொய்வின்றி வழங்குதல், யூ-வின் மற்றும் இ-வின் செயலிகளைக் கையாளுதல், அதில் உள்ள மேம்பாடுகளை அறிந்து கொள்தல் என பல்வேறு பயிற்சிகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
இதற்கான பயிலரங்குகள் பல்வேறு மாவட்டங்களிலும், அதன் தொடா்ச்சியாக பொது சுகாதாரத் துறை தலைமையகத்திலும் நடத்தப்பட்டன. இதன் வாயிலாக தடுப்பூசி சேவைகள் ஆக்கபூா்வமாக கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றாா் அவா்.