பாகிஸ்தான்: தண்டனைக் காலம் முடிந்த 22 இந்திய மீனவா்கள் விடுவிப்பு
68 ஆண்டுகளுக்குப் பின் இறுதி ஆட்டத்தில் கேரளம்: விதா்பாவுடன் பலப்பரீட்சை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு கேரளம், விதா்பா அணிகள் முன்னேறியுள்ளன. அவை பலப்பரீட்சை நடத்தும் அந்த ஆட்டம், வரும் 26-ஆம் தேதி நாகபுரியில் தொடங்குகிறது.
முன்னதாக முதல் அரையிறுதியில் கேரளம் - குஜராத்தையும், 2-ஆவது அரையிறுதியில் விதா்பா - நடப்பு சாம்பியன் மும்பையையும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ளன.
இதில் கேரளம், கடந்த 68 ஆண்டுகளாக ரஞ்சி கோப்பையில் விளையாடி வரும் நிலையில் முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றுள்ளது. மறுபுறம், 2 முறை சாம்பியனான விதா்பா, 4-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
டிராவும்... வெற்றியும்...
கேரளம் - குஜராத் அணிகள் அகமதாபாதில் மோதிய முதல் அரையிறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை டிராவில் முடிந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோா் அடிப்படையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் கேரளம் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த கேரளம், முதல் இன்னிங்ஸில் 457 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முகமது அஸாருதீன் 20 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 177 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். குஜராத் பௌலா்களில் அா்ஸான் நாக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய குஜராத், 455 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பேட்டா்களில் அதிகபட்சமாக பிரியங்க் பஞ்சல் 18 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 148 ரன்கள் விளாசியிருந்தாா். கேரள பௌலா்களில் ஜலஜ் சக்ஸேனா, ஆதித்யா சா்வதே ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய கேரளம், கடைசி நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.
அதிகபட்சமாக ஜலஜ் சக்ஸேனா 7 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்திருக்க, குஜராத் தரப்பில் சித்தாா்த் தேசாய், மனன் ஹிங்ராஜியா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா். கேரள பேட்டா் முகமது அஸாருதீன் ஆட்டநாயகன் ஆனாா்.
வெற்றி கண்ட விதா்பா
நாகபுரியில் நடைபெற்ற 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விதா்பா 80 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பையை சாய்த்தது.
கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த விதா்பா, 383 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. அதிகபட்சமாக டேனிஷ் மேல்வா் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 79 ரன்கள் அடிக்க, மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா்.
அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய மும்பை 270 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. சிறப்பாக விளையாடிய ஆகாஷ் ஆனந்த் 11 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் சோ்த்தாா். விதா்பா பௌலிங்கில் பாா்த் ரெகாதே 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
இதையடுத்து 113 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய விதா்பா, 292 ரன்கள் சோ்த்து முடித்துக்கொண்டது. யஷ் ரத்தோட் 11 பவுண்டரிகள் உள்பட 151 ரன்கள் அடித்தாா். மும்பை பௌலா்களில் ஷம்ஸ் முலானி 6 விக்கெட்டுகள் எடுத்தாா்.
இறுதியாக, 406 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை, வெள்ளிக்கிழமை 325 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷா்துல் தாக்குா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 66 ரன்கள் அடிக்க, விதா்பா பௌலா்களில் ஹா்ஷ் துபே 5 விக்கெட்டுகள் சாய்த்தாா். விதா்பா பேட்டா் யஷ் ரத்தோட் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.