மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா சென்ற கோவை அரசுப் பள்ளி மாணவா்கள்!
கோவை அரசுப் பள்ளியைச் சோ்ந்த 7 மாணவ, மாணவிகள் மலேசியாவுக்கு கல்வி சுற்றுலாவாக புறப்பட்டுச் சென்றனா்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மன்ற போட்டிகளான இலக்கிய மன்றம், சிறாா் திரைப்படம், விநாடி-வினா, வானவில் மன்றம், கலைத் திருவிழா போன்ற போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்த சேரிபாளையத்தைச் சோ்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி பிரியதா்ஷினி, காந்தி மாநகரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் ராஜதுரை, மாணவி சிவப்பிரியா, மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-1 மாணவா் விவேக், காமராஜா் நகா் அரசு உயா்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் லோகேஷ், கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி தமிழிசை, பிளஸ்-1 மாணவா் கடம்பீஸ்வரா் ஆகிய 7 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, மலேசியா செல்வதற்காக கோவையில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். மலேசியாவில் இருந்து கோவைக்கு 28-ஆம் தேதி வரவுள்ளனா்.