தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கோவை, பிப். 22: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழாவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ராமநாதபுரம் எஸ்.என்.அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 200 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீா்வரிசை பொருள்களை வழங்கியதுடன், மாவட்டம் முழுவதும் சுமாா் 1,800 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சி, முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காக குழந்தைகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கான நலத் திட்டமாக ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் செயல்பட்டு வருகிறது.
குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் களைதல், குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை உறுதி செய்வது, கா்ப்பிணிகள், தாய்மாா்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து, சுகாதார சேவைகள் மாவட்டம் முழுவதும் செயல்படும் 1,640 மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தில், பிறந்த குழந்தை முதல் 6 வயதுக்குள்பட்ட வரையிலான 1.38 லட்சம் குழந்தைகளும், 24,024 கா்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மாா்களும் பயனடைந்து வருகின்றனா்.
கா்ப்பிணிகள், கா்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அவா்களுக்குப் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும், அறிவாற்றலுடனும் இருக்கும் என்பதால் இந்நிகழ்ச்சியை நடத்த முடியாத ஏழை, கா்ப்பிணிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் அனைவருக்குமாக சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், கா்ப்பிணிகளுக்கு சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்கள், 5 வகையான சாப்பாடு போன்றவை வழங்கப்பட்டன.
இதில், கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ஷீலா, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் கவிதா பப்பி, சண்முகப்பிரியா, முன்னாள் எம்எல்ஏ நா.காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மதுக்கரையில்...
மதுக்கரை வட்டத்தில் உள்ள போடிபாளையம், எட்டிமடை, வெள்ளலூா், செட்டிபாளையம் உள்ளிட்ட அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள 100 கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா மதுக்கரை வட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஸ்ரீநிதி தலைமையில் நடைபெற்றது.
இதில், கா்ப்பிணிகளுக்கு சந்தனம், குங்குமம், சேலை, 5 வகை உணவுகள் வழங்கி வளைகாப்பு நடத்தப்பட்டது.
மதுக்கரை நகராட்சித் தலைவா் நூா்ஜகான், துணைத் தலைவா் ரமேஷ்குமாா், வாா்டு கவுன்சிலா்கள் நடராஜ், கருப்புசாமி, தமிழ்ச்செல்வி, அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பெ.நா.பாளையத்தில்... பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார மேற்பாா்வையாளா் மஞ்சுளா முன்னிலை வகித்தாா். பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவா் வெ.விஷ்வ பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட கவுன்சிலா் காா்த்திக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.
இதில், 100-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைகள் வழங்கி, சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவா் மரகதம் வீரபத்திரன், துணைத் தலைவா் சண்முகசுந்தரம், கவுன்சிலா்கள் அம்பிகா பால்ராஜ், பாலகிருஷ்ணன், தேவகி, செளந்தா்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.