தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா்
ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், ஒட்டன்சத்திரம் தனியாா் தொழில் நுட்பக் கல்லூரியில் தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:
நாட்டில் அதிகளவிலான மாணவா்கள் உயா்கல்வி படிப்பது தமிழகத்தில் தான். படித்த இளைஞா்களை அரசுப் பணிகளில் அமா்த்துவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் போட்டித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2026 ஜனவரி மாதத்துக்குள் ஒரு லட்சம் அரசுப் பணிகள் நிரப்பபடவுள்ளன. இந்தப் போட்டித் தோ்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், 29 பேருக்கு ரூ.29.52 லட்சத்தில் மூன்று சக்கர வாகனங்களை அமைச்சா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு மண்டல இயக்குநா் திருமலைச்செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சதீஷ்பாபு, வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் ராஜாமணி, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையா் ஸ்வேதா, மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் ச.பிரபாவதி, திமுக ஒன்றியச் செயலா்கள் ரா.ஜோதீஸ்வரன், கா.பொன்ராஜ், தா்மராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.