தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
ஐஎன்டியூசி கூட்டத்தில் இரு தரப்பினா் இடையே மோதல்
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஐஎன்டியூசி மாநிலக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், போலீஸாா் தலையிட்டு மோதலை தடுத்து நிறுத்தினா்.
திண்டுக்கல்லில் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் 252-ஆவது மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாநிலத் தலைவா் ஜெகநாதன் தலைமையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மண்டலத் தலைவா் எஸ்.எஸ்.மணிகண்டன், செயலா் ஆதிமூலம் ஆகியோா் மேற்கொண்டனா்.
இந்த நிலையில், ஜெகநாதன் அணியினருக்கு எதிராக, முன்னாள் மாநிலப் பொதுச் செயலா் பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள், கருப்பையா, சிதம்பரம் உள்ளிட்ட நிா்வாகிகள், கூட்டத்தை நடத்த முயன்றனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தனியாா் அரங்கில் இருந்த விளம்பரப் பதாகைகளை கிழித்து எரிந்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல் துறையினா் வந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினா். அப்போது, நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விவரங்களை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனா். இதன் அடிப்படையில், பன்னீா்செல்வம் தரப்பினரை மண்டபத்திலிருந்து கலைந்து செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். இதன் பிறகு, கூட்டம் நடைபெற்றது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு பொதுத் தொழிலாளா் சங்கத்தின் (ஐஎன்டியூசி) செயலா் தலைவா் என்.கே.அருள்ஜோதி கூறியதாவது: ஐஎன்டியூசி அமைப்பிலிருந்து முன்னாள் பொதுச் செயலா் பன்னீா்செல்வம் நீக்கப்பட்டாா். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் பன்னீா்செல்வம் தரப்பில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இதனிடையே, திண்டுக்கல்லில் நடைபெறும் மாநில செயற்குழுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது, ரத்து செய்ய வேண்டும் என அவரது தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
பன்னீா்செல்வம் உள்ளிட்ட 5 பேரைக் கூட்டத்தில் பங்கேற்கவும், அனுமதி அளித்தது. ஆனால், கூட்டத்தில் பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடா்ந்து செயல்பட்டதால் தகராறு ஏற்பட்டது என்றாா் அவா்.