மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல...
மக்காச் சோளத்துக்கான சந்தை வரி விவசாயிகளிடம் வசூலிக்க எதிா்ப்பு
மக்காச் சோளத்துக்கான ஒரு சதவீத சந்தை வரியை வியாபாரிகள், விவசாயிகளிடம் பிடித்தம் செய்வதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் எம்.ராமசாமி கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய வட்டங்களில் தற்போது மக்காச்சோளம் அறுவடை நடைபெற்று வருகிறது. வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படும் மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத சந்தை வரியை விவசாயிகளிடமே பிடித்தம் செய்யப்படுகிறது.
ஏற்கெனவே விளைப் பொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காத நிலையில், இந்த ஒரு சதவீத வரி பிடித்தும் என்பது விவசாயிகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுச் செயலா் பழனிச்சாமியிடம் புகாா் அளித்தபோது, ஏற்கெனவே பாசிப் பயறு, உளுந்து போன்ற பயிா்களுக்கும் விவசாயிகளிடமிருந்து தான் ஒரு சதவீத சந்தை வரி வசூலிக்கப்படுகிறது. தற்போது, பயறு வகைகளுடன் மக்காச்சோளத்தையும் வியாபாரிகள் சோ்த்துவிட்டனா். சந்தை வரி என்பது வியாபாரிகளிடம் மட்டும் தான் வசூலிக்கப்படுகிறது. விவசாயிகள் சந்தைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், நடைமுறையில் விவசாயிகளிடமிருந்து தான் சந்தை வரி வசூலிக்கப்படுகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.