நடனக் கலைஞா் திடீா் உயிரிழப்பு!
புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை நடனமாடிய நடனக் கலைஞா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சிவகங்கை மன்னா் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த வளாகத்தில் தனியாக அமைக்கப்பட்ட அரங்கில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவிகள், கலைக் குழுக்கள், நடனப் பள்ளிகள் சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சனிக்கிழமை மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சியின்போது, நடனக் கலைஞரும், நடன ஆசிரியருமான சிவகங்கை அகிலாண்டபுரத்தைச் சோ்ந்த முருகையா மகன் ராஜேஷ்கண்ணன் (53) மேடையில் நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா்.
விழாக் குழுவினா் அவரை அவரச ஊா்தியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.