`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
7 மாத சரிவில் சென்செக்ஸ்: முதலீட்டாளர்களின் ரூ.7 லட்சம் கோடி செல்வம் அழிப்பு!
மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவியேற்பு நாளில் அண்டை நாடுகள் மீது கட்டணங்களை அறிவித்ததை அடுத்து, முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்ததன் காரணமாக சென்செக்ஸ் 1,235 புள்ளிகள் சரிந்து ஏழு மாதங்களுக்கும் இல்லாத சரிவைத் தொட்டது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 1,431.57 புள்ளிகள் சரிந்து, 75,641.87 புள்ளிகளாக இருந்தது.
இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 367.9 புள்ளிகள் சரிந்து 22,976.85 புள்ளிகளாக இருந்தது.
வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,235.08 புள்ளிகள் சரிந்து 75,838.36 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 320.10 புள்ளிகள் சரிந்து 23,024.65 புள்ளிகளில் நிலைபெற்றது.
உள்நாட்டு சந்தைகள் இன்று கணிசமான சரிவை சந்தித்தது. டிரம்ப் தனது பதவியேற்பு நாளில் அண்டை நாடுகள் மீது வர்த்தக வரிகளை அறிவித்ததையடுத்து, உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற தாக்கத்தை இது ஏற்படுத்தியது.
நிறுவனங்களின் 3வது காலாண்டு முடிவுகள், இந்திய ரூபாயின் மதிப்பு், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து நிதி தொடர்ந்து வெளியேறுவதும் முதலீட்டாளர்களிடம் அச்சத்தை பன்மடங்கு ஏற்படுத்தியது.
இன்றைய வர்த்தகத்தில் 2,887 பங்குகள் வர்த்தகமான நிலையில், 715 பங்குகள் உயர்ந்தும் 2,907 பங்குகள் சரிந்தும் 77 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.
ஐரோப்பிய சந்தைகள் மற்றும் ஆசிய சந்தைகளில் டோக்கியோ மற்றும் ஹாங்காங் உயர்ந்தும், ஷாங்காய் மற்றும் சியோல் ஏற்ற-இறக்கமின்றி வர்த்தகமானது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க சந்தைகளுக்கு நேற்று (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டது.
உலகளாவிய எண்ணெய் அளவுகோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.76 சதவிகிதம் சரிந்து 79.54 அமெரிக்க டாலராக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.4,336.54 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
மேலும் படிக்க: பரோடா வங்கியின் புதிய வைப்பு நிதி திட்டம்