70 ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்களைத் தயாரிக்க: ரூ. 3,657 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் 3, 5 ஆகிய வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் 70 மெட்ரோ ரயில்களைத் தயாரிப்பதற்காக ரூ. 3,657.53 கோடியில் பிஇஎம்எல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில், மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையும் (3-ஆவது வழித்தடம்), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையும் (4-ஆவது வழித்தடம்), மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரையும் (5-ஆவது வழித்தடம்) 3 வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த, 3 வழித்தடங்களிலும் ஓட்டுநா் இல்லா மெட்ரா ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 மற்றும் 5-ஆவது வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்காக ரூ.3,657.53 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பிஇஎம்எல் நிறுவனத்துக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சாா்பில் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி மற்றும் பிஇஎம்எல் நிறுவனத்தின் இயக்குநா் ராஜீவ் குமாா் குப்தா ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்களை வடிவமைப்பது, உற்பத்தி செய்வது, அவற்றை பயன்படுத்த பணியாளா்களுக்கான பயிற்சி அளிப்பது மேலும் மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களை 15 ஆண்டுகளுக்கு முழுமையாக பராமரிப்பது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கும்.
மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில் 2026-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். தொடா்ந்து இந்த ரயில் இயக்கத்துக்கான சோதனைகள் நடத்தப்படவுள்ளன. அதன்பின்னா் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் மாா்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்படும்.
மெட்ரோ ரயில் 2 கட்ட திட்டத்துக்கான ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்வதற்காக 3 ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. அதில் முதலாவது ஒப்பந்தம் ஏற்கெனவே வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.