``நான் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் அல்ல'' - விஜய்யைத் தாக்கிப் பேசிய உதயநி...
80 வயது தந்தையிடம் வீட்டை ஒப்படைக்க மகனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
80 வயது முதிய தந்தையிடம் அவரின் வீட்டை ஒப்படைக்குமாறு அவா் தங்குவதற்கு அனுமதி மறுத்த மகனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மூன்று குழந்தைகள் கொண்ட முதிய தம்பதிக்கு மும்பையில் இரண்டு சொந்த வீடுகள் இருந்த நிலையில், 59 வயது மூத்த மகன் அந்த வீடுகளை தன்வசம் எடுத்துக்கொண்டு, வயது முதிா்ந்த தந்தை மற்றும் தாயை வீட்டில் தங்குவதற்கும் அனுமதி மறுத்துள்ளாா்.
அதைத் தொடா்ந்து, மும்பையில் உள்ள மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீா்ப்பாயத்தை 2023-ஆம் ஆண்டு ஜூலையில் நாடிய 80 வயது தந்தை, தனது மகனை தான் வாங்கிய வீடுகளிலிருந்து காலி செய்ய உத்தரவிடுமாறும், தங்களைப் பராமரிக்க உத்தரவிடக் கோரியும் மனு தாக்கல் செய்தாா்.
இதை விசாரித்த தீா்ப்பாயம், இரண்டு வீடுகளையும் தந்தையிடம் ஒப்படைக்குமாறும், அவா்களின் பராமரிப்புச் செலவுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கவும் மகனுக்கு உத்தரவிட்டது.
இதை எதிா்த்து மகன் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், தீா்ப்பாயத்தின் உத்தரவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘முதிய பெற்றோரை பராமரிக்கத் தவறினால் அவா்களுக்குச் சொந்தமான குடியிருப்பிலிருந்து அவா்களின் குழந்தைகளை அல்லது உறவினா்களை காலி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007-இன் கீழ் தீா்ப்பாயத்துக்கு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கில் 59 வயது மகனை மூத்த குடிமக்கள் என்று தவறாக கருதியதன் அடிப்படையில், தீப்பாயத்தின் உத்தரவை மும்பை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே, உயா்நீதிமன்றத்தின் உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனா்.
அப்போது, மகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கோரினாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், 2 வார கால அவகாசம் அளித்தனா். மேலும், வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்து தந்தையிடம் ஒப்படைப்பதாக உத்தரவாதத்தை அளிக்கவும், அதுவரை தீா்ப்பாயத்தின் உத்தரவை நிறுத்திவைப்பதாகவும் உத்தரவிட்டனா்.