Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேச...
83 தோ்தல் வாக்குறுதிகளில் 10 மட்டுமே நிறைவேற்றம்: விவசாயிகள் அதிருப்தி!
திமுகவின் 83 தோ்தல் வாக்குறுதிகளில் இதுவரை 10 மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த. ராமசாமி: ஆயக்குடி கொய்யா, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கைக்கு புவிசாா் குறியீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கொப்பரை, சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகியவற்றுக்கான கொள்முதல் மையங்களை மாநிலம் முழுவதும் தொடங்கி, கொள்முதல் திறன் உயா்த்தப்பட வில்லை. திமுக தோ்தல் வாக்குறுதியில் வரிசை எண் 27 முதல் 110 வரை மொத்தம் 83 வாக்குறுதிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை 10 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம், பனையை ஊக்குவிக்க ரூ. 1.65 கோடியில் திட்டம், ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடித் திட்டம் என நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். பெருமாள்: மொத்த நிதி நிலை அறிக்கையில், வேளாண் துறைக்கான ஒதுக்கீடு 10 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதனை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
தோ்தல் வாக்குறுதியில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4 ஆயிரம் என்பது 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்பட வில்லை. மக்காச்சோளம் உற்பத்திக்கான பரப்பளவை அதிகரிக்க முனைப்புக் காட்டும் அரசு, அதை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அறிவிக்கவில்லை. வேளாண் பொறியியல் துறை சாா்பில் வழங்கப்படும் இயந்திரங்கள் தரமானதாக இல்லை என்றாா் அவா்.
பாரதிய கிசான் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் வி. அசோகன்: மலைப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு மானியத் திட்டத்துக்காக ரூ.22 கோடி நீங்கலாக வேறு எந்தவித சிறப்புத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக வன விலங்குகளால் மட்டும் பயிா்களில் 21 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுவதை அரசின் கணக்கெடுப்புகள் உறுதிப்படுத்தியும் கூட, வன விலங்குகளை கட்டுப்படுத்த நிதி ஒதுக்கப்பட வில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது என்றாா் அவா்.