பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
831 மகளிா் குழுக்களுக்கு ரூ.103.58 கோடி கடனுதவி: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 831 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 103.58 வங்கிக் கடனுதவியை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்.
செங்கல்பட்டு ஆட்சியா்அலுவலகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின் கீழ், 15,350 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஊரகப் பகுதியில் 10,355 குழுக்களும், நகா்ப்புற பகுதியில் 4,995 குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், மொத்தம் 831 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 103.58 வங்கிக் கடன் இணைப்பும், 3,575 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளும், 98 சுய உதவிக் குழுக்களில் 196 சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 75 லட்சம் சமுதாய முதலீட்டு நிதியும், 224 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 3.55 கோடி மகளிா் தொழில்முனைவோா் நிதியும் மற்றும் 42 சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 10 லட்சம் வட்டார வணிக வள மையம் நிதியும் மொத்தம் 929 சுய உதவிக் குழுக்களில் 14,960 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.108.09 கோடியையும் அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்
இதில், ஆட்சியா் தி.சினேகா, சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) பி.ஸ்ரீதேவி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மாவட்ட செயல் அலுவலா் தினகா் ராஜ்குமாா் கலந்து கொண்டனா்.