Aadhar Card-ல் மாறும் கடைசிப் பெயர்; கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பம் - தவிர்ப்பது எப்படி?!
வங்கி கணக்கில் எதாவது மாற்றம், டிக்கெட் பதிவு... எந்த இடத்திற்குச் சென்றாலும் முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஆதார் இருக்கிறதா?' என்பது தான். இன்று இந்திய மக்களின் வாழ்வில் ஆதார் இன்றியமையாத இடத்தைப் பிடித்துவிட்டது.
கிட்டத்தட்ட 130 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் ஆதார் கார்டு (Aadhar Card) வைத்திருக்கின்றனர் என்று தரவுகள் கூறுகின்றன. ஆக, இந்தக் கட்டுரையைப் படித்து கொண்டிருக்கும் அநேகம் பேரிடம் ஆதார் கார்டு கட்டாயம் இருக்கும்.
எல்லாம் இருக்கிறதுதான்... ஆனால், ஆதார் கார்டு பல அவசர சமயங்களில் காலை வாரிவிடுகிறது... அதைக் கவனித்துள்ளீர்களா?

ஆம்... பல நேரங்களில் எங்காவது ஆதார் கார்டு கேட்கப்படும் போது, 'ஆதார் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும் பெயர் மாறியிருக்கிறதே', 'தமிழ் அட்ரஸும், ஆங்கில அட்ரஸும் வேறு மாதிரி இருக்கிறதே' என்று ஏகப்பட்ட குழப்பங்கள் எழுகின்றன.
இதைத் தவிர்க்க, உங்களது ஃப்ரீ டைமில், ஆதார் கார்டில் உள்ள தகவல் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை பாருங்கள்... எதாவது தவறு இருந்தால் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
அப்படி நீங்கள் செக் செய்ய வேண்டியவை என்ன?
> கடைசிப் பெயர் சிக்கல்: 2010-ம் ஆண்டு சமயத்தில் நம்மில் பெரும்பாலானவர்கள் ஆதார் கார்டு எடுத்திருப்போம். அப்போது, இனிஷியலுக்கு பதிலாக, தந்தை பெயர் 'கடைசிப் பெயராக' பதியப்பட்டது. அதில்தான் இப்போது பெரும்பாலானவர்களுக்கு சிக்கல் எழுகிறது.
காரணம், ஆதார் கார்டைத் தவிர, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்றவற்றில் இனிஷியல் தான் கடைசிப் பெயராக பதிவாகி இருக்கிறது
இதைத் தவிர்க்க, மற்ற ஆவணங்களில் கடைசிப் பெயர் என்னவாக பதிவாகி இருக்கிறதோ, அதன்படி உங்கள் ஆதாரிலும் மாற்றிக்கொள்ளுங்கள். அதற்கு உங்கள் மற்ற ஆவணங்களையே ஆதாரமாக வழங்குங்கள்.
> முகவரி என்ன?: ஆதாரில் தமிழில் இருக்கும் முகவரியும், ஆங்கிலத்தில் இருக்கும் முகவரியும் ஒரே மாதிரி பதிவாகி இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மாறியிருந்தால் கடைசி நேரத்தில் பிரச்னை எழும்.

> முகம் முதல் முகவரி வரை: நீங்கள் ஆதார் கார்டை 10-12 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருப்பீர்கள். இப்போது முகம் முதல் முகவரி வரை பல மாறியிருக்கும். அதனால், இப்போதைய தேதிக்கு ஏற்ப ஆதார் கார்டை அப்டேட் செய்வது மிக அவசியம். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை அனைவரும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை அப்டேட் செய்துவிடுங்கள்.
> கைரேகையில் சிக்கல்: ஆதார் கார்டில் பெரும்பாலான மாற்றங்கள் செய்யச் செல்லும்போது கைரேகையை பதிவு செய்வார்கள். அதனால், அந்தச் சமயங்களில் பெண்கள் கையில் மருதாணி வைத்துக்கொள்ளாமல் செல்வது நல்லது. இல்லையென்றால், கைரேகைப் பதிவில் சிறிது மாற்றங்கள் ஏற்படலாம்.
> OTP பிரச்னை: ஆதார் எண்ணை எங்காவது ஆதாரமாகக் கொடுக்கும்போது, கட்டாயம் OTP கேட்பார்கள். அதனால், உங்களிடம் இப்போது உள்ள மொபைல் எண்தான் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் போன்றவற்றை ஆதார் இணையதளத்திலேயே செய்துகொள்ளலாம். பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற மாற்றங்களை இ-சேவை மையங்களில் நேரில் சென்று செய்ய வேண்டும்.
சீக்கிரம்... ஆதாரை அப்டேட் செய்துவிடுங்கள் மக்களே!