நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் தினசரி பேருந்தில் பயணம் செய்கின்றனர். வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்வதற்காகப் பயணிகள் இங்கு நின்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நாட்றம்பள்ளி பகுதியைச் சுற்றி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், முதியோர் ஆகியோர் இங்கு அதிக அளவில் வந்து செல்லும் நிலை உள்ளது. ஆனால் இவ்வளவு முக்கியம் வாய்ந்த இடத்தில் பேருந்து நிழற்குடை இல்லாததால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், வங்கி, மளிகை, காய்கறிக் கடை என பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ``இந்த இடம் இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படித்தான் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காகப் பயணியர் நிழற்குடை இடிக்கப்பட்டது. மீண்டும் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. நாங்களும் இந்த விவகாரம் குறித்துப் பல முறை எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்தப் பகுதி முக்கிய வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிற்கும் சந்திப்பாக இருப்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி விரைந்து நிழற்குடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இது குறித்து அப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களிடம் விசாரித்தபோது, ``பேருந்து நிறுத்தங்கள் இடிக்கப்பட்ட பிறகு, சில சமயங்களில் அரசுப் பேருந்துகள் முறையாக எங்கள் ஊரில் நிற்பதில்லை. அரசுப் பேருந்துகள் மட்டுமல்ல... தனியார் பேருந்துகள்கூட இப்பகுதியில் நிற்பதில்லை. கூட்டம் அதிகமாக இருந்தால் மட்டும் பேருந்துகள் எங்களை ஏற்றிச் செல்கின்றன. இரண்டு அல்லது மூன்று நபர்கள் இருந்தால் பேருந்து மாயமாகச் சென்று விடுகிறது.

நாங்கள்தான் இங்கு மழையிலும் வெயிலிலும் அல்லாடுகிறோம்... அதிகாரிகள் வந்து பார்த்தார்கள்... ஆனால் இதுவரை ஒன்றும் மாறவில்லை. போதாததற்கு, நெடுஞ்சாலையின் ஓரமே நிற்பதால், நாள்தோறும் பயந்து பயந்து உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பயணம் மேற்கொண்டு வருகிறோம். பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதிரடி நடவடிக்கைகள் எடுக்காமல், அது ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கின்றனர்.