Aamir Khan: `குறைவான உயரம்; மக்கள் நிராகரித்து விடுவார்கள் என பயந்தேன்’ - நடிகர் ஆமீர் கான் ஷேரிங்ஸ்
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மற்ற நடிகர்களை காட்டிலும் சற்று உயரம் குறைவானவர். ஆமீர் கான் பாலிவுட்டிற்கு வந்த புதிதில் தான் உயரம் குறைவாக இருப்பதை நினைத்து வருத்தப்பட்டதாகவும், தாழ்வு மனப்பான்மை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆமீர் கான் யூடியூப் சேனல் ஒன்றில் தனது கருத்துக்களை நடிகர் நானா பட்டேகருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ''பாலிவுட்டுக்கு வந்த புதிதில் நான் உயரம் குறைவாக இருந்ததால் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற பயம் இருந்தது.
மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்ற பயமும் இருந்தது. இதனால் பாதுகாப்பற்ற ஒரு எண்ணம் எனது மனதில் ஊடுருவி இருந்தது. ஆனால் இது ஒரு பிரச்னை இல்லை என்பதை பின்னர் புரிந்து கொண்டேன்'' என்றார்.
உடனே நானா பட்டேகர், ``என்னை பார் நானே இந்த முகத்தை வைத்துக்கொண்டு 50 ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஆமிர் கான், ``ஆரம்பத்தில் எனக்குள் உயரம் விவகாரத்தில் மன அழுத்தம் இருந்தது. ஆனால் அது ஒரு பிரச்னை இல்லை என்பதை புரிந்துகொண்டோம்.
எந்த அளவுக்கு நேர்மையாக வேலை செய்கிறோம் என்பதும், நமது நடிப்பு மக்களை எந்த அளவுக்கு ஈர்க்கிறது என்பதுதான் முக்கியம் என்பதும், மற்றவை முக்கியமில்லை என்பதை தெரிந்து கொண்டோம்'' என்றார்.
இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்றிலும், ``நான் குள்ளமாக இருப்பதாக மக்கள் நினைப்பார்கள் என்று கவலைப்பட்டேன். ஆனால் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள்” என்று ஆமீர் கான் குறிப்பிட்டு இருந்தார். ஆமீர் கான் தற்போது சிதாரே ஜமீன் பர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கடைசியாக ஆமீர் கான் நடித்த படம் சரியாக ஓடாததால் சில மாதங்கள் நடிப்பில் இருந்து ஆமீர் கான் ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.