கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை! குற்றவாளி குறித்த திடுக் தகவல்...
AI உதவியால் ரூ.10 லட்சம் கடனை முடித்த பெண் - நீங்களும் இப்படிச் செய்யலாம்!
ஒவ்வொரு நபரும் நிதிச் சுதந்திரத்தை நோக்கிச் செல்வதற்குத் தடையாக இருப்பது கடன்கள்தான். மாதம் தோறும் பணத்தைச் சேமிக்கக்கூட விடாமல் கடன்கள் தடுக்கின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியக் குடும்பங்களின் கடன் சுமை, இந்தியப் பொருளாதாரத்தில் 42.9 சதவிகிதமாக இருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பங்களின் கடன் சுமையில், தனிநபர் கடன்களின் பங்கு 54.9 லட்சம் கோடி ரூபாய். இவை எல்லாம், பட்டியலிடப்பட்ட வங்கிகளால் கொடுக்கப்பட்ட கடன்கள் மட்டுமே. இதுதவிர நிதி நிறுவனங்கள், வெளியே வாங்கப்படும் கடன்கள் எல்லாம் சேர்த்தால் எங்கோ போய்விடும்.
குறிப்பாக, கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்து வருகிறது. கிரெடிட் கார்டுகளை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் கடுமையான கடன் சுமையில் சிக்கிக்கொள்வதற்கு வாய்ப்புள்ளது. கடன் சுமையைக் குறைப்பதற்குத் தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஏனெனில், இயல்பிலேயே கடன் சுமை மேலும் மேலும் வளரும் தன்மை கொண்டது.
இந்த நிலையில், ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 10 லட்சம் ரூபாய்க் கடன்களை அடைத்துள்ளார் ஜெனிஃபர் ஆலன் என்ற பெண்மணி. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் சமூக வலைதள பிரபலமாகவும், ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டாகவும் தொழில் செய்து வருகிறார். நல்ல வருமானம் இருந்தாலும் கூட, நிதி நிர்வாகத்தில் கோட்டை விட்டுவிட்டார். தனக்கு போதிய நிதிக் கல்வியறிவு இல்லாததால் கடன் சுமையில் சிக்கியதாகக் கூறுகிறார் ஜெனிஃபர்.

குறிப்பாக அவருக்கு மகள் பிறந்தபோது மருத்துவச் செலவுகளுக்காகவும், பிள்ளைக்கான தேவைகளுக்காகவும் அதிகளவில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்திருக்கிறார். அவசர தேவைக்குச் செய்த கிரெடிட் கார்டு செலவுகள், கிடுகிடுவென வளர்ந்து 23,000 டாலர் (19.7 லட்சம் ரூபாய்) கடன் சுமையாக மாறிவிட்டது. இந்த சூழலில்தான் ஏ.ஐ தொழில்நுட்பத்திடம் ஐடியா கேட்கலாம் என யோசித்திருக்கிறார்.
ஏ.ஐ சாட்போட்களின் பயன்பாடு பரவலாக அதிகரித்து வருகிறது. சமையல் குறிப்புகள் தொடங்கிப் படிப்பு வரை பல விஷயங்களுக்கு ஏ.ஐ சாட்போட்களிடம்தான் ஐடியா கேட்கின்றனர். அந்த வகையில், பிரபல ஏ.ஐ சாட்போட்டான சாட்ஜிபிடியிடம் ஜெனிஃபர் ஆலோசனை கேட்டிருக்கிறார். சாட்ஜிபிடி சொன்ன ஆலோசனைகளைக் கேட்டுப் பாதி கடனை அடைத்துவிட்டார்!
எப்படி?
சாட்ஜிபிடியின் உதவியுடன் 30 நாள்களுக்குச் சவால் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன்படி, கடன் சுமையைக் குறைப்பதற்காக ஒவ்வொரு நாளும் சாட்ஜிபிடி ஒரு செயலை செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறது. அதை ஜெனிஃபர் அப்படியே கடைப்பிடிப்பார். உதாரணமாக, ஒரு நாளில் தனது வங்கிக் கணக்குகள், முதலீட்டுக் கணக்குகள் மற்றும் இதர ஃபைனான்ஸ் ஆப்களை அலசி, அதில் வெளியே எடுக்கப்படாமல் கிடப்பிலிருந்த 10,000 டாலருக்கு (8.5 லட்சம் ரூபாய்) மேற்பட்ட தொகையை எடுத்துவிட்டார்.
வேறு சில நாள்களில், வீட்டில் உள்ள பொருள்களை மட்டும் வைத்தே சமைக்க வேண்டும் என்பது சவால். கடைக்குச் சென்று மளிகைப் பொருள்கள், உணவுப் பொருள்கள் வாங்கக்கூடாது. இந்த சவால் மூலம் மளிகைப் பொருள்களுக்கான செலவு கணிசமாகக் குறைந்துவிட்டது. இதுதவிர, பயன்படுத்தப்படாத சப்ஸ்கிரிப்ஷன்களை ரத்து செய்துவிட்டார். பயன்படுத்தப்படாத பொருள்களை ஆன்லைனில் விற்றுவிட்டார்.

இப்படி சாட்ஜிபிடி சொன்ன ஐடியாக்களைக் கடைப்பிடித்து, சவால்களை முடித்து 12,078.93 டாலர் (10.3 லட்சம் ரூபாய்) கிரெடிட் கார்டு கடன்களைக் கட்டிமுடித்துவிட்டார். அதாவது, சுமார் 50% கடன் சுமையைக் குறைத்துவிட்டார். இவ்வளவும் 30 நாள்களில் சாத்தியமாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, மீண்டும் 30 நாள்களுக்குச் சவால்களை முடித்து, மீதமுள்ள கடன்களையும் அடைப்பதற்குத் திட்டமிட்டுள்ளார்.
ஏ.ஐ தொழில்நுட்பத்தை இப்படியும் பயன்படுத்தலாம் என்பது வேறு விஷயம். ஆனால், தனக்கு போதிய நிதிக் கல்வியறிவு இல்லை என்பதே கடன் சுமை பெருகக் காரணம் என்கிறார் ஜெனிஃபர். குறிப்பாக, அவர் மாத பட்ஜெட் போட்டதே இல்லை. கடுமையாக உழைத்தாலே பணப் பிரச்னைகள் இருக்காது என நம்பியதாகக் கூறுகிறார். ஆனால், கணக்கு வழக்கின்றி பணம் கசிவடைந்ததுதான் கடன் சுமை பெருக முக்கிய காரணம். எனவே, பட்ஜெட் போடுவது எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
நீங்களும் செய்யலாம்!
இளம் தலைமுறையினர் மத்தியில் இதுபோல ஃபைனான்ஸ் சேலஞ்ச் ட்ரெண்டுகள் பரவலாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, குறிப்பிட்ட சில நாள்களுக்கு, அத்தியாவசியமற்ற பொருள்களுக்காகச் செலவு செய்யக்கூடாது என்கிற No Spend Days ஒரு பிரபலமான சேலஞ்ச் முறை.
Loud Budgeting என்னும் மற்றொரு ஃபைனான்ஸ் ட்ரெண்ட் இருக்கிறது. அதாவது, அதிகம் செலவு செய்ய முடியாமல், பட்ஜெட்டில் இருக்கிறேன் என அனைவரிடமும் கூச்சப்படாமல் சொல்லிவிட வேண்டும். மற்றவர்களிடம் சொல்லத் தயங்கி பணத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, பட்ஜெட்டில் இருக்கிறேன் எனச் சொல்லிவிட்டு பணத்தைச் சேமிக்கலாம் என்பதே இதன் ஐடியா. உதாரணமாக, ஒரு காஸ்ட்லியான டின்னருக்குப் போக வேண்டும் என யாராவது அழைத்தால், பட்ஜெட்டில் இருக்கிறேன் என்று சொல்லித் தவிர்த்துவிடுவது.

இதுதவிர, '48 Hour Rule' என்னும் 48 மணி நேர விதி ஒரு முக்கியமான ட்ரெண்ட். ஒரு பொருளை வாங்க வேண்டும் என விருப்பப்பட்டால், அவசர அவசரமாக ஆர்டர் செய்துவிடக்கூடாது. அடுத்த 48 மணி நேரங்களுக்குப் பொறுத்திருக்க வேண்டும். இந்த 48 மணி நேர இடைவெளியில், அந்தப் பொருள் உங்களுக்குத் தேவைதானா அல்லது அநாவசிய செலவா என்பது உங்களுக்கே புரிந்துவிடும். எனினும், 48 மணி நேரத்துக்குப் பிறகு, வாங்கலாமா வேண்டாமா என்பதெல்லாம் உங்கள் இஷ்டம்!
விலைவாசி ஏற்றம், கடன் சுமை என பல்வேறு பணப் பிரச்னைகளுக்கு மத்தியில், இளம் தலைமுறையினர் இப்படி வித்தியாசமான ஃபைனான்ஸ் ட்ரெண்டுகளை கடைப்பிடித்து வருகின்றனர்.