Allu Arjun : நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீச்சு... பதற்றம் - வழக்கு பதிவுசெய்த போலீஸ்!
புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், அதை கொண்டாட முடியாத சூழலில் சிக்கித் தவித்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் மகன் மூளைச்சாவடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து காவல்துறை நடிகர் அல்லு அர்ஜுனைக் கைதுசெய்தது. நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொண்டுவருகிறார்.
இதற்கிடையில், நேற்று ஹைதராபாத்தில் இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் வீடு உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (OU JAC) எனக் கூறிக்கொள்ளும் மாணவர்களால் கல்வீசித் தாக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர், ``மறைந்த ரேவதியின் குடும்பத்தை அல்லு அர்ஜுன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நடிகரை திரையுலக பிரபலங்கள் வந்து பார்த்து ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் ஒரு திரைப்பட ரசிகை இறந்தபோது அவர்களில் யாரும் கவலைப்படவில்லை." என்றார்.
இது தொடர்பாக அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``எங்கள் வீட்டுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தச் சூழலை சமாளிக்க, அதற்கேற்ப செயல்பட வேண்டிய நேரம் இது. எதற்கும் எதிர்வினையாற்ற இது சரியான நேரம் அல்ல. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களைப்போல இங்கு வந்து பிரச்னை செய்பவர்களிடமிருந்து எங்களைப் பாதுகாக்க காவல்துறை தயாராக இருக்கிறது. இது போன்ற செயல்பாடுகளை யாரும் ஊக்குவிக்கக் கூடாது. சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும்." என்றார்.