மும்பை: 85 பேருடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது! மாயமானோரை தேடும் பணி தீவிரம்
Ashwin: அஸ்வினின் டாப் கிரிக்கெட் மொமென்ட்ஸ்- ஒரு பார்வை
பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்துக் கொண்டிருக்கும்போது அஸ்வின் தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறார். அவருடைய கரியரில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
* கிரிக்கெட் பழகிக் கொண்டிருந்த காலத்தில் அஸ்வின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் ஃபாஸ்ட் பெளலர். அஸ்வினின் பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியம்தான் இவரை ஸ்பின் பெளலராக மாற்றினார்.
* 2004-ம் ஆண்டு அஸ்வின் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்த அணிக்காக அதே ஆண்டு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார் அஸ்வின்.
* ஓ.டி. ஐ மற்றும் டி20 பார்மெட்டுகளில் 2010-ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தன்னுடைய முதல் ஒரு நாள் போட்டியில் ஆடியவர் அதே ஆண்டில் ஜிம்பாவேவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் டி20 போட்டியில் களமிறங்கினார்.
* 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மூலம் டெஸ்ட் பார்மெட்டில் அறிமுகமானார் அஸ்வின். அறிமுகமான முதல் போட்டியிலேயே மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அட்டநாயகன் விருதைப் பெற்றார். இதுமட்டுமல்ல, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சதமும் அடித்தார் அஸ்வின். ஒரே டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பேட்டிங்கிலும் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் அஸ்வின். இதே போல அவர் 4 முறை செய்து சாதனை படைத்திருக்கிறார்
* 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் அஸ்வின். காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷேன் வாட்சனின் விக்கெட்டை வீழ்த்தி கவனம் ஈர்த்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.
* கடந்த 2022-ம் ஆண்டு தன்னுடைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தன்னுடைய 100-வது விக்கெட்டை எடுத்தார் அஸ்வின். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் அஸ்வின்தான்.
* 18-வது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 100-வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தவர் 37-வது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 200-வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார். இந்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 500-வது விக்கெட்டை எடுத்திருந்தார் அஸ்வின். இது அஸ்வின் 98-வது டெஸ்ட் போட்டி.
*மேல் குறிப்பிட்ட சம்பவம் முடிந்து சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் அஸ்வின். இதுமட்டுமல்ல, உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
* 2009-லிருந்து 2014-ம் ஆண்டு வரை சி.எஸ்.கே அணிக்காக ஆடிவந்தார் அஸ்வின். அந்தக் குறிப்பிட்ட காலகத்தில் சி.எஸ்.கே அணிக்காக சில முக்கியமான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். தற்போது 10 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சி.எஸ்.கே திரும்பவிருக்கிறார் அஸ்வின்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்டர் தொடரில் ஆடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது போட்டி முடிந்திருக்கிறது. இந்த நேரத்தில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.
அஸ்வினின் முக்கிய கிரிக்கெட் தருணம் என நீங்கள் நினைக்கும் மேட்ச்சை கமென்ட்டில் பதிவிடுங்கள்