Ashwin: 'இந்தியாவை விட நியூசிலாந்து தகுதியான அணியாக இருந்தது!' - ஒயிட் வாஷ் பற்றி அஷ்வின்!
நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரை 0-3 என தோற்று ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது இந்திய அணி. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உள்ளூரில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆவது இதுதான் முதல் முறை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாபெரும் தோல்வி அது.
இந்நிலையில், இந்த தோல்வி குறித்து தமிழக வீரரான அஷ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் நியூசிலாந்து அணி இந்தத் தொடரில் இந்தியாவை விட எல்லாவிதத்திலும் நன்றாக ஆடியிருந்தது என்றும் கூறியிருக்கிறார்.
அஷ்வின் பேசியதாவது, 'நியூசிலாந்துக்கு எதிரான ஒயிட் வாஷூக்கு நானும் ஒரு மிக முக்கிய காரணம்தான். என்னை நானே நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டேன். லோயர் ஆர்டரில் நான் இன்னும் அதிக ரன்களை சேர்த்திருக்க வேண்டும், தவறிவிட்டேன். வீழ்த்தவே முடியாது இதுதான் நிரந்தரமென்று எதுவுமே இல்லை. என்னைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வேண்டும் என நினைப்பேன். அந்த முடிவிலிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு புதிய பயணத்தை தொடங்க வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூரில் இந்தியா செலுத்திய ஆதிக்கத்தின் முடிவு.
போட்டிகளை வெல்ல கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும். அதிர்ஷ்டம் எளிதில் கைக்கு வந்துவிடாது. நாம் அதற்காக உழைக்க வேண்டும். அதிர்ஷ்டத்தை சம்பாதிக்க வேண்டும். நாங்கள் அதிர்ஷ்டத்தை கையில் பிடிக்க எதையும் செய்யவில்லை. நியூசிலாந்து எல்லாவற்றையும் செய்தது.
எங்களுக்கு இல்லாத தகுதி நியூசிலாந்துக்கு இருந்தது. அதுதான் இரு அணிகளுக்குமான வித்தியாசம். நாங்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தனிப்பட்ட சில தாக்குதல்கள் எங்களை காயப்படுத்துகிறது. அதை மட்டும் செய்யாதீர்கள்.' என்றார்.