Squid Game: 'ஸ்குவிட் கேம் சீசன் 3' - அப்டேட் கொடுத்த நடிகர் லீ ஜங் ஜே
Ashwin: 'எனக்கு வருத்தமெல்லாம் இல்லை, ஆனால்..!' - ஓய்வு குறித்து சென்னையில் அஷ்வின் ஓப்பன் டாக்
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்த ஓய்வு முடிவை அவர் அறிவித்தார். இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய அஷ்வினுக்கு அவரது குடும்பத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வின், " இங்கு வந்த எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

இவ்வளவு நாள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி விட்டு இப்போது இல்லாமல் இருப்பது வேறு மாதிரியான உணர்வாகதான் இருக்கிறது. 2011-ல் டெஸ்ட் மேட்ச் விளையாடிவிட்டு வந்தப்போது இந்த மாதிரியான ஒரு உணர்வு இருந்தது. இந்த மாதிரியான அறிவிப்புகள் நிறைய பேருக்கு எமோஷனலாக இருக்கலாம். ஆனால் எனக்கு நிம்மதியாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.
எனக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே நான் என்னனென்ன செய்திருக்கிறேன் என்பது ஞாபகத்துக்கு வரவில்லை. அதுவே எனக்கு அடுத்தப் பாதையை தேடுவதற்கான யோசனையை தந்தது. அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும். நிறைய பேர் ஓய்வு அறிவிப்பிறகு பிறகு வருத்தத்துடன் இருப்பார்கள். ஆனால் எனக்கு அப்படி எதுவும் இல்லை.
நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். ஒரு கிரிக்கெட்டராக எனது பங்களிப்பை அளித்துக்கொண்டே இருப்பேன். சிஸ்கேவில் மீண்டும் இணைந்து விளையாட இருக்கிறேன். என்னால் முடிந்த வரை விளையாடுவேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.