Baba Kalyani: தாய்க்குச் சமாதி கட்டுவது யார்? சகோதரியை எதிர்த்து நீதிமன்றம் போன பாபா கல்யாணி
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாபா கல்யாணி. கல்யாணி குரூப் ஆப் கம்பெனிகளின் உரிமையாளரான பாபா கல்யாணி தனது பெற்றோர் இறந்த பிறகுச் சொத்தைப் பிரித்துக்கொள்வதில் தனது சகோதரி சுகந்தாவுடன் பிரச்னை ஏற்பட்டது. இந்த சொத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதற்கும் மேலாக இருவரும் இறந்து போன தங்களது தாயாருக்குச் சமாதி கட்டும் பிரச்னையைக்கூட நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பாபா கல்யாணியின் தாயார் சுலோச்சனா கல்யாணி புனே பார்வதி நிவாஸில் வசித்து வந்த போது இறந்து போனார். அதே வீட்டில் அவருக்கு நினைவுச்சின்னம் கட்ட பாபா கல்யாணியும், சகோதரி சுகந்தாவும் முடிவு செய்தனர். அதனைத் தானே கட்டுவதாக சுகந்தா தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த மாதம் 13ம் தேதி பாபா கல்யாணி சார்பாக புனே நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தனது தாயாருக்கு தானே நினைவுச்சின்னம் கட்டப்போவதாகக் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து பாபா கல்யாணியும், அவரது இளைய சகோதரர் கெளரி சங்கர் மற்றும் சகோதரி சுகந்தா ஆகியோர் தங்களது குடும்ப குருவிடம் இது குறித்துக் கலந்து ஆலோசித்தனர். இதில் சமாதியைக் கட்டுவது குறித்துப் பேச பிப்ரவரி 20ம் தேதி மீண்டும் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் சுகந்தா தனது கணவரோடு வந்தார். ஆனால் பாபா கல்யாணி வரவில்லை. இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாபா கல்யாணியும், சுகந்தாவும் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு சுகந்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ''ஏற்கனவே தனது தாயாருக்குக் காசியில் சமாதி கட்டிவிட்டதாகப் பாபா கல்யாணி தெரிவித்துள்ளார். உடனே அவர் சொன்ன இடத்திற்குச் சென்று பார்த்தபோது மடத்தில் ஒரு சிறிய சிவலிங்கம் மட்டும் வைக்கப்பட்டு இருந்தது. அது சமாதிக்கான எந்த தகுதியும் இல்லாமல் இருந்தது. பாபா கல்யாணி முற்றிலும் பொய் சொல்லி இருக்கிறார்" என்று தெரிவித்திருந்தார்.
இவ்விவகாரத்தில் பாபா கல்யாணி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரச்னைக்குச் சுமுக தீர்வு காணத் தயாராக இருக்கிறோம். ஆனால் எதிர்தரப்பினர் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து இவ்வழக்கு ஏப்ரல் 2ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. ஏற்கனவே சொத்து பிரிவினை தொடர்பாக சுகந்தா புனே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அது தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
