Bala 25: "பாலா சாரின் அந்த ஃபோன் கால்; என் வாழ்க்கையை மாற்றியத் தருணம்" - சூர்யா நெகிழ்ச்சி
இயக்குநர் பாலா, தனது திரையுலப் பயணத்தைத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், அவரது 'வணங்கான்' பட இசை வெளியீட்டு விழாவையும் இணைந்து கொண்டாடும்படி இன்று சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் 'பாலா 25' விழா நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் நடிகர் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஸ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். இவ்விழாவில் நடிகர் சிவக்குமார் இயக்குநர் பாலாவுக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கினார். இதையடுத்து பாலா குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கும் நடிகர் சூர்யா, "2000- ல, நெய்காரன்பட்டில ஷூட்டிங் அப்போ ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலுக்குப் பிறகு வாழ்க்கைல எல்லாமே மாறிடுச்சு.
'சேது' படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துச்சு. இப்படி ஒரு நடிகர் நடிக்கமுடியுமா?, இயக்குநர் இப்படி இயக்க முடியுமானு 100 நாள் எனக்குள்ள 'சேது' படத்தோட தாக்கம் இருந்தது. அடுத்தப் படத்தை உன்னை வச்சு பண்றேன்னு சொன்ன பாலா சார் வார்த்தை எல்லாத்தையும் மாத்துச்சு. 'பிதாமகன்' ஷூட்டிங்ல பாலா சார்கூட ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை கவனிச்சேன்.
2000 ல எனக்கு ஒரு போன் வரலைனா இந்த வாழ்க்கை எனக்குக் கிடையாது. 'நந்தா' பார்த்துட்டு கெளதம் 'காக்க காக்க' படத்துக்குக் கூப்பிட்டாரு. அதன் பிறகு என்னுடைய சஞ்சய் ராமசாமி இங்க இருக்கார்னு முருகதாஸ் சார் கூப்பிட்டார். இதுக்கெல்லாம் காரணம் பாலா அண்ணன்தான்.
'வணங்கான்' மிக முக்கியமான படமாக இருக்கும். உறவுகளுக்கு பாலா அண்ணன் மதிப்பு கொடுப்பார். அவங்களோட அறம், கோபம்னு பல விஷயங்களை அண்ணன் படத்துல பார்க்கலாம். அண்ணன்ங்கிறது ஒரு வார்த்தை இல்ல, ஒரு உறவு. நிறந்தரமான இந்த அண்ணன் தம்பி உறவைக் கொடுத்த அண்ணனுக்கு நன்றி. என்னுடைய பேரன்பும் மரியாதையும் இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு அண்ணா.." என்று பேசியிருக்கிறார் சூர்யா.
சூர்யா பாலா உரையாடல்
முதல் முறையாக சூர்யாவைப் பார்த்த தருணம் :
பாலா : 'பாண்டி பஜார்ல இருந்து நடந்து போய் சூர்யாவைப் பார்த்தேன். ஒரு விழாவில் என்னை இறக்கிவிட சொன்னேன். அப்போதான் முடிவு பண்னணேன் தம்பிதான் நம்ம அடுத்த ஹீரோனு.. ஆனால் அதை கொஞ்சம் தாமதமாக சொன்னேன்.'
சூர்யா : 'என் இன்ப துன்பங்களை கூட இருந்து அண்ணன் பார்த்துக்குவார்.'
பாலா : 'நான் சூர்யாகூட வேலை பார்த்தால் ஒரு நடிகரோட வேலை பார்த்த மாதிரி இருக்காது. தம்பிகூட வேலை பார்த்த மாதிரி இருக்கும். என்னுடைய குறைகளை எனக்கு அழைத்து 'அண்ணா இது உங்க படம் மாதிரி இல்ல 'னு சொல்லி எச்சரிக்கை கொடுக்குற உரிமை இருக்கு.'
சூர்யா : 'எனக்கு முதன்முதல்ல தம் அடிக்கக் கத்துக் கொடுத்தது அண்ணன்தான். 'நந்தா' படத்தோட காட்சி, அந்த காட்சியில எனக்கு தம் அடிக்க தெரில. எனக்கு தெரியாதுனு சொல்லிட்டேன். எனக்கு அவமானம் ஆகிடுச்சு. அந்த நேரத்தில 300 முறை முயற்சி பண்ணேன். அன்னைக்குக் கத்துக்கிட்டது இன்னைக்கு ரோல்க்ஸ் கதாபாத்திரம் வரை யூஸ் ஆகியிருக்கு.'
பாலா : 'நான் சூர்யா முன்னாடி சிகரெட் அடிக்க மாட்டேன். தம்பி வருத்தப்படுவான். அதுனால, பெரிதாக மானிட்டர் வச்சு தம் அடிப்பேன். நடிச்சுகிட்டே நான் எத்தனை முறை தம் அடிச்சுருக்கேன்னு தம்பி சரியாக சொல்லிடுவார்.'
இப்படியாக சென்றது அந்த உரையாடல்..!