பாமக: 'விசுவாசத்தை ஓரம் கட்டிய சொந்தம்' - ராமதாஸ், அன்புமணி, மோதலுக்கு காரணமான ...
BB TAMIL 8 DAY 81: காதலுக்கு பச்சைக்கொடி; அருண் அப்பாவின் ஊக்க மருந்து; நெகிழ வைத்த முத்துவின் அம்மா
போட்டியாளர்களுடனான குடும்பச் சந்திப்போடு இந்த எபிசோடு நிறைந்தது. ஒரு சராசரியான கிராமத்து தமிழ்க் குடும்பத்தை முத்துவின் குடும்பம் பிரதிபலித்தது. ‘நம்ம பரம்பரைக்கே பெருமை சேர்த்துட்டப்பா’ என்று முத்துவின் தாயார் பெருமிதப்பட்டதெல்லாம் ஒரு கிராமத்து அம்மாவின் அசலான மகிழ்ச்சி.
விருந்தினர்கள் செயற்கையாக பேசுகிறார்கள், நடிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்ல நமக்கு உரிமையில்லை. ஒரு காட்சியை, அதன் பின்னணியில் வைத்து யோசித்து நம்மோடு அதனைப் பொருத்திப் பார்த்தால்தான் அந்தக் காட்சியின் அழுத்தம் நமக்குப் புரியும். நம்மைத் தவிர எல்லோருமே நடிக்கிறார்கள் என்று போகிற போக்கில் சொல்வது முறையல்ல.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 81
வேக் அப் பாடலின் போதே ஜெப்ரியின் குடும்பம் உள்ளே நுழைந்தது. எவ்வித சஸ்பென்ஸூம் இல்லை. அழுது கதறுவார் என்று பார்த்தால் மிக இயல்பாகவே அவர்களை வரவேற்றார் ஜெப்ரி. அவருடைய அம்மா கண்ணீர் விட்டது யதார்த்தமான காட்சி. “பாட்டுப் பாடறதை நிறுத்திட்டே. அதிகம் காணோம். பாட்டுப் பாடு” என்று சரியான உபதேசத்தைச் சொன்னார் ஜெப்ரியின் அப்பா. இந்த மேடையின் மூலம் தன் கலைத்திறமையை அழுத்தமாக வெளிப்படுத்தினால் அது வருங்காலத்திற்கான பல்வேறு புதிய கதவுகளைத் திறக்கக்கூடும். மாறாக வம்பு, புறணியில் மட்டுமே சிக்கிக் கொண்டால் இந்த வாய்ப்பை வீணடித்ததாகவே அர்த்தம்.
“பிஸிக்கல் டாஸ்க்லாம் அசால்ட்டா பண்ணிடுவேன். ஆனா இந்த மைண்ட் கேம்தான். யோசிச்சி யோசிச்சு தலைவலிக்குது. எப்படி பேசினாலும் திருப்பி விட்டுடறாங்க” என்று தலையைப் பிய்த்துக் கொண்டார் ஜெப்ரி. ‘முரண்பாடு’ மேட்டர் வரும் போது ஜெப்ரியின் பெற்றோருக்கு சொல்ல அதிகமில்லை. ஜாக்குலினிடம் மட்டும்தான் பேசினார்கள். “ஜெப்ரி டீம் மாறிட்டே இல்லம்மா. ‘தனியா விளையாடு’ன்னு சேது சாரும் சொன்னார். மத்தபடி அவன் நட்பாத்தான் இருக்காம்மா. தப்பா நெனக்காதீங்க. சத்யா, அன்ஷிதா கூடல்லாம் அவன் நட்பு சரியான மீட்டர்ல போயிட்டேதான் இருக்குது” என்று ஜெப்ரியின் அம்மா சொல்ல புன்னகையோடு தலையாட்டினார் ஜாக்குலின்.
“கோவா கேங்க்ஸ் எனக்குப் பிடிக்கும்” என்ற ஜெப்ரியின் அம்மா சவுந்தர்யாவிற்கு பொட்டு வைத்து அழகு பார்த்தார். இன்று சேலை கட்டியிருந்த அன்ஷிதாவிற்கு கண்ணாடி வளையல் பரிசாக கிடைத்ததில் அம்மணி ஹாப்பி. ஜெப்ரியோடு இணைந்து அம்மாவும் சேர்ந்து பாடியது அருமையான காட்சி. “அப்பா, அம்மாவை ஸ்கிப் பண்ணிட்டு போயிருக்கேன். என் தப்பைத்தான் இந்த உலகம் பார்த்தது. இனிமே கவலையில்லை. உதவி பண்ண நிறைய பேர் இருக்காங்க” என்று பெற்றோருக்கு நன்றி சொன்னார் ஜெப்ரி.
ஹார்லி க்வீன் ஆப்சென்ட் - காதலுக்கு கிடைத்த பச்சைக்கொடி
அடுத்ததாக அருணின் குடும்பத்தார். அருணைப் போலவே ஹார்லி க்வீனின் வரவையும் பார்வையாளர்கள் ஆவலாக எதிர்பார்த்திருப்பார்கள். அர்ச்சனா கடந்த சீசனின் வெற்றியாளர் வேறு. ஆனால் அருணிற்கு ஆட்டம் காட்ட முடிவு செய்த பிக் பாஸ் “ தவிர்க்க முடியாத காரணங்களால் உங்க குடும்பம் வரலை. வீடியோ கால் ஏற்பாடு பண்ணியிருக்கோம்” என்று கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்தார். இது Prank என்று நம்மாலேயே உணர முடிகிற போது, உணர்ச்சித் தத்தளிப்பில் இருந்த அருண் அதை நிஜமென்று நம்பி ‘குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆகி விட்டதா’ என்கிற கவலையில் ஈடுபட்டார்.
அதற்குள் இனிய சர்ப்ரைஸாக அருணின் அம்மாவும் ‘கட் அண்ட் ரைட்டாக’ பேசுகிற அப்பாவும் வரவேற்பறையில் இருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் வித்தியாசமாக காலில் விழுந்து வணங்கினார் அருண். தனி உரையாடலில் “உன் கேப்டன்ஷிப் ரொம்ப நல்லாயிருந்ததுப்பா.. வைஸ் பிரின்ஸிபல் ரோல் நல்லா பண்ணே.. எல்லோரும் சாப்பிட்ட பிறகு நீ சாப்பிட்டது டச்சிங்கா இருந்தது. நீ ஒரு ஸ்ட்ராங் பிளேயர்ப்பா.. காய்க்கிற மரம்தான் கல்லடி படும். தைரியமா விளையாடு” என்று ஊக்க மருந்தை செலுத்தினார் அருணின் அப்பா.
“எல்லா பிளேரையும் எனக்குப் பிடிக்கும். யார் கிட்டயும் எனக்கு வருத்தமில்ல” என்று வெளியில் சொன்ன அருணின் அப்பா, உள்ளே வந்தவுடன் ‘முரண்பாடு இல்லாம இருக்குமா?” என்று பேச்சை ஆரம்பித்தார். (பிக் பாஸ் யாரையும் மாற்றி விடும் போல!). “மஞ்சரி பொம்மையை தலையைத் திருகிப் போடணும்னு அருண் சொன்னது விளையாட்டுக்கு. ஆனா ‘ஏதாவது பண்ணிட்டு போயிடலாம்ன்னு தோணுது’ ன்னு முத்து சொன்னது விளையாட்டில்ல.” என்கிற ஆட்சேபத்தைத் தெரிவிக்க, தன் வழக்கமான கள்ளப் புன்னகையோடு அதை எதிர்கொண்டார் முத்து.
கறாராகவும் கனிவாகவும் பேசிய அருணின் அப்பா
அடுத்ததாக இதுவரைக்கும் யாருமே புகார் சொல்லாத, பாராட்டை மட்டுமே பெற்ற தீபக் மீதும் விமர்சனம் எழுந்தது. “லேபருக்கு இவ்வளவு டீ போதும்ன்னு தீபக் சொல்லியிருக்கக்கூடாது. அதுதான் வளர்ந்து வளர்ந்து சண்டையாச்சு” என்று அருண் அப்பா சொல்ல அதை மௌனமாக ஏற்றுக் கொண்டார் தீபக். “அவரு என் பேரைச் சொன்னவுடன் குப்புன்னு வியர்த்துடுச்சு” என்று பிறகு சவுந்தர்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
நம்முடைய மைண்ட் வாய்ஸை சரியாக கேட்ச் பிடித்த ஜெப்ரி “ஹார்லி க்வீன் வரலையா?” என்று குறும்பாகக் கேட்க “அருண் எதை பண்ணாலும் சரியா யோசிச்சு பண்ணுவான். அவன் சாய்ஸ் சரியா இருக்கும். அதனால எங்களுக்கு ஓகேதான்” என்று அருணின் பெற்றோர் சூசகமாக பச்சைக்கொடி காட்டியதில் பாதி நிச்சயதார்த்தம் அங்கேயே முடிந்து போனது. ‘சப்பாத்தி’ எக்ஸ்பர்ட் ஆன அருண் தனது பெற்றோருக்கு அதை தயாரித்து தர வேண்டும் என்கிற டாஸ்க்கை மகிழ்ச்சியோடு செய்தார் அருண்.
முத்துவையும் அருணையும் பக்கத்து பக்கத்தில் நிற்க வைத்து “அவரு உன் அண்ணா மாதிரி” என்று அப்பா சொல்ல “அண்ணா..” என்று முத்துவை அருண் அழைத்தது சுவாரசியமான நகைச்சுவை. பெற்றோர் கிளம்பும் போது ‘அர்ச்சனாவை கேட்டதா சொல்லுங்க” என்று அருண் வெட்கத்தோடு சொன்னது க்யூட் ஆன காட்சி. (இனிமே லேட்டா வந்தா அர்ச்சனாவோடதான் வரணும்! - இந்த ரேடியோ விளம்பரம் 90’ஸ் கிட்களுக்கு மட்டும்தான் புரியும்).
குழந்தை மாதிரி ஏங்கிய ஜாக்குலின்
ஒவ்வொருவரின் அம்மா - அப்பா வரும் போதும் ‘தன்னுடைய அம்மா வரலையே’ என்று பள்ளிக்குழந்தை மாதிரி ஏங்கிக் கொண்டிருந்தார் ஜாக்குலின். இப்போது அது நிகழ்வதற்கான தருணம். ஜாக்கின் அம்மாவும், தோழியும் உள்ளே வந்தார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் மறைவாக நின்றிருந்தார் ‘பிரெண்டு’. அம்மாவைப் பார்த்ததும் தெலுங்கில் ‘மாட்லாடி’ ‘நான் ஏதாச்சும் தப்பு செஞ்சுட்டேனா.. உங்களை கஷ்டப்பட வெச்சுட்டேனா..?” என்று குழந்தை மாதிரியான முகபாவத்தோடு கேட்டார் ஜாக்குலின்.
ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆவது, ரெட் கார்ப்பரேட் வரவேற்பு போன்ற விஷயங்களால் தானொரு நெகட்டிவ் பிம்பமாக பதிந்து போயிருக்கிறோமோ என்கிற கவலையும் அச்சமும் ஜாக்கிற்குள் இருப்பதை உணர முடிகிறது. கிறிஸ்துமஸ் தாத்தாவாக இருப்பது தன் தம்பி என்று நினைத்து ‘அவன் ஏன் அங்க நிக்கறான்.. மென்ட்டல்’ என்று செல்லமாக வசைந்தார் ஜாக். அப்புறம்தான் தெரிந்தது, வந்தது ‘பிரெண்டு’ என்று. ‘நண்பர்களை விடமாட்டாங்கன்னு நெனச்சேன்” என்று இன்ப அதிர்ச்சியில் மூழ்கினார் ஜாக்.
“நான் நெகட்டிவ்வா தெரிஞ்சனா?” என்று அதே பல்லவியைப் பாடிய ஜாக்கிடம் “நீ சிங்கிளா விளையாடு” என்று வந்தவர்கள் உபதேசித்தார்கள். “என்னால டெவிலா பண்ண முடியலை” என்கிற அதே விஷயத்தை மீண்டும் கூறினார் ஜாக். (விசேவின் உபதேசமெல்லாம் வேஸ்ட்!). “ஏன் நீங்களும் பிக் பாஸ் மாதிரியே கடுகடுன்னு பேசறீங்க. பாசமாத்தான் பேசித் தொலைங்களேன்” என்கிற மாதிரி நண்பர்களிடம் ஜாக் சிணுங்கியது சுவாரசியமான காட்சி.
“இந்த மென்ட்டல் கேம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. 12 வாரமும் நாமினேட் ஆகியிருக்கேன். ஒருத்தர் கூட இங்க பாராட்ட மாட்றாங்க. ஆனா நான் நிறையப் பேரைப் பாராட்டறேன்” என்று குழந்தை மாதிரி சிணுங்கிய ஜாக்கிடம் அவரது அம்மா ஆறுதல் மற்றும் ஊக்க வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்.
‘அவதான் எங்களை அழ வைப்பா’ - ஜாக்கின் அம்மா
முரண்பாடு டாஸ்க்: ஜாக்கின் தோழி, ஜெப்ரியிடம் மட்டும் பிராது வைத்தார். “அவ யாருன்னு எங்களுக்குத் தெரியும். அவ உங்களைத்தான் தம்பியா நெனச்சிருக்கா. தம்பின்னா உயிரையே தருவா. எதுவா இருந்தாலும் முன்னாடி பேசுங்க. பின்னாடி பேசாதீங்க. அவ அப்படி பேச மாட்டா” என்று சொல்லப்பட்டதும் “அறியாத பிள்ளை தெரியாம பண்ணியிருப்பேன்” என்று மன்னிப்பு கேட்டார் ஜெப்ரி.
ஜாக் அழும் போதெல்லாம் அரவணைத்து தைரியம் சொன்ன தீபக் அண்ணாவிற்கு ஸ்பெஷல் பாராட்டு கிடைத்தது. “வீட்ல எங்களைத்தான் அவ அழ வைப்பா. இங்க அவ அழறதைப் பார்க்க எங்களுக்குப் புதுசா இருக்கு” என்றார் அம்மா. (வீட்ல புலி, வெளில எலி போல!). தங்களின் குடும்பம் வந்து போன மகிழச்சியை ‘இப்பத்தான் ஜாலியா இருக்கு’ என்று குழந்தை போல கைதட்டி மகிழ்ந்தார் ஜாக்.
இந்த சீசனின் டைட்டில் வின்னராக முத்து வரக்கூடும் என்பதற்கான சமிக்ஞை தெரிந்தது. ஆம், சவுந்தர்யாவிடமே முத்து ஆசி வாங்கி விட்டார். “லிவ்விங் ஏரியால மட்டும்தான் முத்துவோட எனக்கு முரண்பாடு இருக்கு. மத்தபடி தூரமா நின்று அவனைப் பார்த்துட்டே இருக்கேன். எல்லாத்திலயும் ஒரு ஒழுங்கு இருக்கு” என்று சவுந்தர்யா வியந்து பேச “ஆமா.. அவன் சில கொள்கைகளை வெச்சுட்டு அதை சரியா கடைப்பிடிப்பான். இப்பக்கூட சிக்கன் அவன்தான் சமைச்சான். ஆனா கேம் முடியற வரைக்கும் நான்-வெஜ் சாப்பிடறதில்லைன்னு சபதம் போட்டிருக்கான்” என்று அந்த வியப்பை தானும் பகிர்ந்து கொண்டார் தீபக். “முத்து என்னோட one of the favourite” என்று ஆசி வழங்கினார் சவுந்தர்யா.
வீட்டை நெகிழ வைத்த முத்துவின் அம்மா
“ஜெப்ரி என்னைப் பத்தி ஏதோ பேசியிருக்கான் போலயே” என்று ரயானிடம் உரையாடலை ஆரம்பித்தார் ஜாக்குலின். “அவன் என்ன பேசினானோ.. வெளில பார்த்தவங்க அதனால ஹர்ட் ஆகியிருக்கலாம். நமக்குத் தெரியாது” என்ற ரயான் “இனிமே வில்லன் ரோலுக்கு மாறிடலாம்ன்னு பார்க்கறேன்” என்றார். அக்கா ஏற்றிய ஊசியின் மருந்து இன்னமும் இறங்கவில்லை போல.
குடும்பச் சந்திப்பு என்பது ‘ப்ரீஸ்’ டாஸ்க் ஆக அறியப்பட்டாலும் இந்த சீசனில் அப்படி நிகழவில்லை. வெவ்வேறு உத்திகளை பிக் பாஸ் டீம் பயன்படுத்தியது. கடைசி அயிட்டமாக முத்துவிற்கு மட்டும் ஃப்ரீஸ் என்று ஆணையிட்டார் பிக் பாஸ். ‘ஒரேயொரு ஊருக்குள்ள ஒரேயொரு அம்மா, அப்பா’ என்கிற பொருத்தமான பாடல் ஒலித்தது. கிராமத்து வாசனையுடன் முத்துவின் பெற்றோர் உள்ளே வந்தார்கள்.
முத்து ஃப்ரீஸ் நிலையிலிருந்து அசைய மாட்டார் என்று யூகித்திருந்தேன். அவர்தான் பிக் பாஸ் ஆட்டத்தை வேதமாக எடுத்துக் கொண்டவர் ஆயிற்றே?! ஆனால் அம்மாவைப் பார்த்ததும் தன்னிச்சையாக அவர் சாய்ந்து கொள்ள “ரொம்ப கஷ்டப்படறியேப்பா” என்று அம்மா கண்கலங்கி அழ, “அழாதம்மா.. இங்க ஒரு கஷ்டமும் இல்லேம்மா” என்று ஸ்போர்ட்டிவ்வாக சொன்னார் முத்து. பக்கத்திலிருந்த மஞ்சரி இதைப் பார்த்து கண்கலங்கியது நெகிழ்வான காட்சி.
“அறிவான பிள்ளையைப் பெத்திருக்கேன். சூப்பரா விளையாடற. நம்ம பரம்பரைக்கே பெருமை சேர்த்துட்டப்பா.. இது பெரிய வாய்ப்பு” என்று அகம் மகிழ்ந்த அம்மா, திருக்குறளையெல்லாம் மனப்பாடம் செய்து பொருத்தமான இடத்தில் சேர்த்து விட்டார். ‘முரண்பாடு’ பற்றி பிக் பாஸ் எடுத்துக் கொடுக்க “எல்லோரும் என் பிள்ளைங்கதான்” என்று அம்மா பாசத்தோடு சொல்ல “அதனாலதான் சொல்லச் சொல்றேன்” என்று டெக்னிக்காக மல்லுக்கட்டினார் பிக் பாஸ்.
சவுந்தர்யாவின் ஆசியைப் பெற்ற முத்து
விஷால், அருண் ஆகிய சிலர் முத்துவின் பின்னால் விளையாட்டாக அடித்த கமெண்ட், ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த அருண் -முத்து நட்பின் விரிசல் (அவனுக்கு பேசத்தான் தெரியும், டமுக்கு டப்பா) போன்வற்றைச் சொன்ன முத்துவின் அப்பா, “எதுவா இருந்தாலும் முன்னாடியே பேசங்க” என்கிற வழக்கமான அறிவுரையைச் சொன்னார். (புறணி பேசுதல் மானுட குலத்தின் அடிப்படை பண்பு மட்டுமல்ல, உரிமையும் கூட!).
மற்றவர்களிடம் வசனம் வசனமாக பேசிக் கொல்லும் முத்துவைப் பற்றி அவருடைய தாயார் ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்பது டாஸ்க். “நிக்கக்கூட நேரமில்லாம ஓடிட்டே இருப்பான். அவனை ஒரே இடத்துல டிவில பார்க்கறது சந்தோஷம். ‘நான்தான் முத்துவோட அம்மா’ன்னு உலகத்துக்கே வெளிச்சம் போட்டு காட்டிட்டான்’. என் புள்ள அறிவானவன். அடங்காதவன் அசராதவன்’ என்று மகனின் பெருமைகளை புளகாங்கிதத்தோடு பட்டியலிட்டார் அம்மா.
இதற்கு எப்படி பதில் சொல்வதென்று முத்துவின் மூளை அதற்குள் யோசித்து வைத்து விட்டது போல. “அப்பா இடத்தில் பிக் பாஸ், அம்மா இடத்தில் விஜய்சேதுபதி, தெய்வத்தின் இடத்தில் மக்கள்” என்று கோர்வையாகப் பேசி அசத்தினார் முத்து. “வெற்றியைத் தாண்டி மரியாதையைச் சம்பாதிச்சிருக்கான்” என்று அதிகாரபூர்வமான ஆசியை வழங்கினார் சவுந்தர்யா. (அப்படின்னா பணம் நிச்சயமா கிடைச்சுடும். டேய்.. வடக்குப்பட்டி ராமசாமி..).
முத்துவின் பெற்றோர் விடைபெற்ற பிறகு “குழந்தையை முதன் முதலில் பார்க்கும் போது சந்தோஷம் அடையறாங்கள்ல.. அதுக்கப்புறம் அவங்களுக்கு கிடைப்பது இந்த மாதிரி சந்தோஷம்தான்” என்று ‘ஈன்றபொழுதின்’ திருக்குறளையே யதார்த்தமான வார்த்தைகளில் சொல்லி நெகிழ்ந்தார் தீபக். “என்னைத் தாண்டி ஒருத்தருக்கு கப்பு போகுதுன்னா, அது உனக்கா இருந்தா சந்தோஷம்” என்றார் ஜாக்குலின். மஞ்சரியும் தீபக்கும் அதை வழிமொழிந்தார்கள். (அப்படில்லாம் விட்டுக் கொடுக்கக்கூடாது!).
ஒருவழியாக இந்த குடும்பச் சந்திப்பு முடிந்து விட்டது. இதை வைத்தே வருகிற விசாரணை நாட்களும் முடிந்து விடும். இந்த வார எவிக்ஷன் ‘சம்மந்தி சேச்சி’யாக இருக்கலாம் என்கிறது என் கணிப்பு. எண்ணிக்கை சுருங்கும் போது இறுதி நாட்களில் வெற்றியாளர் யார் என்பதற்கான வெளிச்சம் அதிகமாகும்.