`கிட்னிகள் ஜாக்கிரதை’ டு `உருட்டு கடை அல்வா’ - சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக...
BB TAMIL 9: DAY 11: தல பதவியை இழந்த துஷார்; புறணி பேசி புலம்பி டைம்பாஸ் செய்யும் பாரு!
துஷார் உஷாராக இல்லாததால் ‘தல’ பதவியை இழந்தார். கேப்டன் பொறுப்பை மறந்துவிட்டு அரோரா பின்னாலேயே சுற்றியதால் அவருடைய பதவி அரோகரா ஆயிற்று.
பிரதிக்ஷா வெஷம்.. ரம்யா வெஷம்.. வியன்னா.. வெஷம்.. பிக் பாஸ் வெஷம்.. விஜய்சேதுபதி வெஷம். என்கிற ரேஞ்சிற்கு புறணி பேசி புலம்பி டைம்பாஸ் செய்கிறார் பாரு.
பிக் பாஸ் வீடு டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ‘லக்ஸரி’ விருந்தை அனுபவித்தது.

வாயை மூடி பேசாத நிலையில் இருப்பேன் என்று சவாலில் வெற்றி பெற்று வீட்டு ‘தல’ ஆனார் துஷார். ஆனால் பதவி கிடைத்தும் அதையேதான் செய்கிறார். வீட்டில் நடக்கும் தவறுகளுக்கு எதிராக வாயைத் திறந்து பேசவேயில்லை. ஆங்காங்கே மக்கள் தூங்கிக் கொண்டும் மைக்கை கழற்றி வைத்தும் ரகசிய குரலில் ரொமான்ஸ் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.
என்னவென்றே புரியாத ஒரு குத்துப்பாடலுடன் பொழுது ஆரம்பித்தது. தேவர் மகன் சிவாஜி மாதிரி ‘ஏதாவது பாட்டு பாட்றி.’ என்று கிச்சன் ஏரியாவில் இருந்த எஃப்ஜேவை ‘ரொமான்ஸ் இம்சை’ செய்து கொண்டிருந்தார் ஆதிரை. “மெதுவா கூட பாடு.. ஏதாவது பாடு.. இல்லைன்னா சூப்பர் பவரை வெச்சு தண்டனை தருவேன். தோப்புக்கரணம் போடு..” என்றெல்லாம் ஆதிரையின் அலப்பறைகள் கூடிக் கொண்டேயிருந்தன.
என்னதான் லவ் செய்யும் நபர் என்றாலும் அவருடைய இம்சைகள் கூடிக் கொண்டே போனால் ஒரு மனிதனுக்கு எரிச்சல் வருமா வராதா? ‘செல்லம். .தங்கம்..’ என்று கொஞ்சிய அதே வாய் ‘சனியனே.. கொஞ்சம் சும்மா இரேன்’ என்று சொல்லுமா.. சொல்லாதா? எஃப்ஜேவிற்கும் கோபம் வந்தது.
தோசை சுட்டுக் கொண்டிருந்த ஆசாமியின் கையை ஆதிரை பிடித்து இழுத்ததால் கோபம் அடைந்து கிச்சனை விட்டு வெடுக்கென்று வெளியேறினார் எஃப்ஜே. “நீங்க மட்டும் நல்லா தின்னீங்கள்ல.. எங்களுக்கு பசிக்காதா?” என்கிற பின்குறிப்பு ஆதிரையை காயப்படுத்தியது.
பிறகு என்ன நடக்கும்? அதேதான். படுக்கையில் உர்ரென்று அமர்ந்திருந்த எஃப்ஜேவை “நான் சும்மா ஜாலிக்குத்தானே பண்ணேன். ஏன் இவ்ள கோபம் வருது” என்று ஆதிரை சமாதானம் செய்ய “உன் கேமை நீ ஆடு.. என் கேமை என் ஆடறே.. போய்த் தொலை” என்கிற மாதிரி முரண்டு செய்த எஃப்ஜே பிறகு ஆதிரையை க்ளோசப்பில் பார்த்தவுடன் ‘தோசை ரவுண்டா வரலை. அந்தக் கோபம்தான்.. ஸாரி’ என்று சொல்ல இந்த ஊடல் முடிவிற்கு வந்தது, தற்காலிகமாக. எத்தனையோ நூற்றாண்டுகளாக தொடரும் இந்த விளையாட்டிற்கு முடிவேயில்லை.

மாஸ்க் டாஸ்க் தொடர்ந்தது. வழக்கம் போல் அடித்துக் கொண்டு ஓடியதில் வியன்னா அவுட். பிக் பாஸ் இதை அறிவித்ததும் ‘ஓகே.. பிக் பாஸ்.. தாங்க்யூ வொி மச்’ என்று ஏதோ விருது வாங்கியதைப் போல கொஞ்சு மொழியில் சொன்னார் வியன்னா. அடுத்த சுற்றில் பிரவீன், ஆதிரை அவுட் ஆனார்கள்.
அடுத்த சுற்றில் நடந்த மோதலில் ரம்யா கீழே விழ, எங்கே மயக்கம் போட்டு விடுவாரோ என்று நமக்குத்தான் பதட்டமாக இருந்தது. ஆட்டத்தின் போது அவரை வழிமறித்து நின்ற கெமி, ஆட்டம் முடிந்த பின் அரவணைத்துச் சென்றது நல்ல ஸ்போர்ட்ஸ்வுமன்ஷிப்.
பெரும்பான்மையான சுற்றுகளில் வெற்றி பெற்று பிக் பாஸ் வீடு முன்னேறியதால் கிராண்ட் டின்னர் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள் என்று பிக் பாஸ் அறிவித்தவுடன் ‘ஹிப் ஹிப்.. ஹூர்ரே’ என்று கூடி கைதட்டி மகிழ்ந்தார்கள்.
“இந்த ரம்யா. இருக்குதே… அத்தனையும் நடிப்பு.. ஆட்டத்துல கீழே விழுந்தா பிடிக்காம விட்டுருவாங்கன்னு டிராமா போட்டிருக்குது.. உடம்பு சரியில்லாத மாதிரி நடிக்குது” என்று பாரு புறணி பேச “ஆமா.. கேடிலயும் கேடி பெரிய கேடி” என்று வழிமொழிந்தார் கலையரசன். “சூப்பர் வீட்ல முதல் வெஷம் ரம்யாதான்.. அப்புறம் சுபிக்ஷா… வினோத்..”என்றெல்லாம் கரித்துக் கொட்டிய பாரு, கம்ரூதீனை மட்டும் சாஃப்ட்டாக ஹாண்டில் செய்தார். (எரிமலைக்குள்ளும் ஒரு பூ பூக்கும்தானே மொமெண்ட்!).

மாஸ்க் டாஸ்க்கில் சபரி, கம்ருதீன், துஷார் ஆகிய மூவரும் எஞ்சினார்கள். மூவர் இருப்பதால் மற்ற இருவரும் மற்றவர்களின் மாஸ்க்கை எடுத்து விட்டால் மூன்றாமவர் அவருடையதை மட்டுமே எடுக்க முடியும்.
Catch 22 சூழல். ஆட்டத்தின் போக்கில் விட்டு விடுவோம் என்று முடிவு செய்தாலும் துஷார் பெற்றி பெற்றால் பிக் பாஸ் வீடு மகிழும். சபரி தோல்வியடைந்தால் பாரு பயங்கர குஷியாகி விடுவார். இறுதியில் அதுதான் நடந்தது. “என் மாஸ்க்கை மூணு முறை எடுத்துல்ல. கடவுள் இருக்கான் குமாரு.. காலம் பதில் சொல்லும்.. டேய் சபரி.. இப்பயாவது என் பவரை புரிஞ்சுக்கோ” என்று குதூகலித்தார் பாரு.
“உன்னைத்தான் டார்கெட் பண்றாங்க போல..பார்த்துக்கோ” என்பது மாதிரி அப்சரா வந்து சொல்ல “பார்த்துக்கலாம், விடு” என்று ஆட்டத்திற்கு முன்னால் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார் சபரி. மனிதர் எந்தவொரு சிக்கலையும் பொறுமையாகயும் அநாயசமாகவும் எதிர்கொள்கிறார். டாப் 5-ல் வருவார் என்கிற அடையாளம் பிரகாசமாக சபரியிடம் தெரிகிறது.
இறுதிச் சுற்றில் துஷாரும் கம்ருதீனும் ஆட கம்ருதீன் வெற்றி. துஷாரை வினோத் ஆவேசமாக தடுக்க கீழே விழுந்து அடிபட்டது. கம்ருதீன் வெற்றி பெற்றதில் பாருவுக்கு டபுள் ஹாப்பி. ஆக.. இந்த வெற்றியின் மூலம் அடுத்த வார நாமினேஷனில் இருந்து கம்ருதீன் விலக்கு பெறுவார். பிக் பாஸ் வீடு வெற்றி பெற்றதால் சூப்பர் வீட்டிலிருந்து 5 நபர்கள் நாமினேஷன் ஆவார்கள்.
கம்ருதீனின் வெற்றியை மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தார் பாரு. அவர் தற்போது இருக்கும் சூப்பர் வீடு தோற்றதில் கூட அவருக்கு மகிழ்ச்சியே. சுபிக்ஷா வெஷம், வியன்னா விஷம். ரம்யா விஷம் என்று பல்லவி பாடிக் கொண்டிருந்தார்.
“ஆக்சுவலி சூப்பர் வீட்ல இப்ப இருக்கறவங்க எல்லாம் மக்கு” என்று கம்ருதீன் சொல்லும் போது அது பார்வதியையும் சேர்த்துதான் குறிக்கும். ஆனால் பாரு அதைக் கவனித்தது போல் தெரியவில்லை. இதுவே சபரி சொல்லியிருந்தால் பேயாட்டம் ஆடியிருப்பார்.

எஃப்ஜே ஒரு பக்கம் தூக்க மயக்கத்தில் இருக்க, அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் துஷார் அராரோவுடன் ரொமான்ஸ் மயக்கத்தில் இருந்தார். போதாக்குறைக்கு அவரே மைக் மாட்டவில்லை. பிக் பாஸ் சுட்டிக் காட்டியும் கூட எழுந்து சென்று பிறகு மறந்து விட்டார். அத்தனை அரோரா மயக்கம். இருவரும் வழக்கம் போல் ரகசியம் பேச “எங்களுக்கும் கேக்கற மாதிரி பேசுங்க” என்று பிக் பாஸ் அதிகாரமாக கெஞ்ச வேண்டியிருந்தது.
துஷாரின் மயக்கம் இப்போதும் நீங்காததால் பிக் பாஸ் அதிர்ச்சி வைத்தியம் தர வேண்டியிருந்தது. சபையைக் கூட்டியவர் “நானும் எத்தனையோ சீசனைப் பார்த்துட்டேன். ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம். ஆனா இந்த சீசன் டிசிப்ளின்னா என்னன்னு கேக்கற ரகமா இருக்கு. அந்த அளவிற்கு விதிமீறல். யாரும் மைக்கை ஒழுங்கா மாட்டலை. பார்க் மாதிரி அங்கங்க தூங்கறீங்க. தட்டிக் கேட்க வேண்டிய துஷாரையே அப்பப்ப எழுப்ப வேண்டியிருக்கு.
ஸோ, இனிமே வீட்டு தல பதவி கிடையாது. துஷாரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குகிறேன். தனி ரூமும் கிடையாது. ஒண்ணும் கிடையாது. போய் கூட்டத்துல தூங்கு” என்று காட்டமாக திட்டியனுப்பினார் பிக் பாஸ்.
“இது உங்க திறமையைக் காட்டக்கூடிய நல்ல ஃபிளாட்பார்ம். ஆனா இத்தனை பெரிய வாய்ப்பை தூங்கி தூங்கி எழுந்து வேஸ்ட் பண்றீங்க.” என்றெல்லாம் பிக் பாஸ் ரவுண்டு கட்டி திட்ட “ஸாரி பாஸ்” என்றார்கள் கோரஸாக.
‘இப்படி இப்படி கண்ணை வெச்சு ஏமாத்திட்டாடா” என்று லைலா குறித்து விவேக் சொன்ன காமெடி போல ‘இந்த அரோரா மூஞ்சைப் பார்த்து ஏமாந்துட்டனே” என்று ரகசியமாக தலையில் அடித்துக் கொண்டார் துஷார்.
“சரிடா.. இதுல இருந்தாவது பாடம் கத்துக்கோ. சியர் அப்” என்று ஆறுதல் சொன்னார் சபரி. இவர் மட்டும் உஷாராக எந்த லவ் டிராக்கிலும் சிக்கவில்லை.

பாரு, திவாகர், கலையரசன் கூட்டணி வழக்கம் போல் உட்கார்ந்து புறணி பேசிக் கொண்டிருந்தது. ‘எல்லோரும் வெஷம்’ என்று வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தார் பாரு. எப்போது இந்தக் கூட்டணி உடையப் போகிறதோ?!
பிக் பாஸ் வீட்டிற்கு ‘சிறப்பு விருந்து’ காத்திருப்பதால் அவர்கள் சமைப்பதில் மும்முரம் காட்டவிலலை.. “எங்களுக்கு பசிக்குது. நாங்க சமைச்சு சாப்பிடலாமா?” என்று சுபிக்ஷா கேட்க வழக்கம் போல் கல்லுளி மங்கனாக இருந்தார் பிக் பாஸ். பசி தாங்காமல் சுபிக்ஷா எழுந்து கிச்சன் பக்கம் செல்ல “அவங்களை வேலை வாங்கறதுதான் நம்ம வேலை” என்று இடையில் புகுந்த பாரு அலப்பறை செய்ய இன்னொரு கலவரம் ஆரம்பம்.
“பாத்திரத்தைக் கழுவிக் கொடு. சமைக்கறோம்” என்று சபரி சொல்ல “நாங்க செஞ்சா அது ரூல் பிரேக் ஆயிடுமே” என்று சுபிக்ஷா தயங்க சண்டை ஆரம்பம்.
“பாருதான் ஏத்தி விட்டா.. நான் என்ன செய்யறது?” என்று பசியும் கோபமும் தாங்காமல் படுக்கையில் சென்று குப்புறப்படுத்து அழத சுபிக்ஷாவை சமாதானப்படுத்தினார் சபரி.
பிக் பாஸ் வீட்டிற்கு மட்டும் கிராண்ட் விருந்து. அவர்கள் டிப்டாப்பாக கிளம்ப, சூப்பர் வீடு பரிதாபமாக வேடிக்கை பார்த்தார்கள்.
‘பிக் பாஸ் வீடு நன்றாக மொக்குவதை சூப்பர் வீடு பார்த்தால்தான் அடுத்த சண்டை உற்சாகமாக நடக்கும்’என்கிற கணக்கிலோ என்னவோ, சிக்கன், மட்டம் என்று அவர்கள் சாப்பிடுவதை தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பி சூப்பர் வீட்டின் வயிற்றொிச்சலைக் கொட்டிக் கொண்டார் பிக் பாஸ்.

அப்படிப்பட்ட நேரத்தில் கூட அந்நியன் படத்தின் காட்சியை நடித்துக் காண்பித்து நம்மை வெறுப்பேற்றினார் திவாகர்.
சூப்பர் வீட்டை எப்படியாவது நாமினேஷனுக்குள் கொண்டு வர வேண்டும் என்று வெறியும் வேகமுமாக திட்டம் போட்ட பிக் பாஸ் வீட்டிற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. கூடவே அறுசுவை விருந்தும். இந்த மோதல் இனி எப்படியாக பயணிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அரோராவும் ஆதிரையும் worst performers என்று தேர்வு செய்யப்பட்டு சிறைக்கு செல்வதாக இன்றைய பிரமோ காண்பிக்கப்படுகிறது. பார்ப்போம்.