`கிட்னிகள் ஜாக்கிரதை’ டு `உருட்டு கடை அல்வா’ - சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக...
`கேள்வியே கேட்கக் கூடாதா?’ - வேல்முருகன் VS துரைமுருகன்; களேபரமான சட்டமன்றம்!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
நீர்வளத்துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெறுகையில் சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.எம்.முனிரத்தினம் சோளிங்கர் ஏரி மதகு அடைபட்டு பாசனத்திற்கு நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்து தர அமைச்சர் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார்.
இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்த உடனே பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமை கட்சி), பவானி தொகுதியின் கோரிக்கையைக் குறிப்பிட்டு, "காவிரி நீரின் உபரி நீரானது அந்தியூர் – பவானி தொகுதியின் ஒரு பகுதி மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்தப் பகுதி விவசாயிகள் சார்பாக உங்கள் இல்லத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தேன். அந்தப் பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பை உருவாக்கி தருவீர்களா?" என்று கேட்டார்.

அதற்கு நிர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "அந்தியூர் – பவானி தொகுதி குறைகளை கேட்பதற்கு அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார்" என்று வேல்முருகனின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்த்தார்.
இதனால் கோபப்பட்ட வேல்முருகன், "மக்கள் பிரச்னைகள் குறித்து அவையில் கேள்வி எழுப்பக் கூடாதா? அமைச்சரின் பதிலுக்கு என்ன அர்த்தம்? " என்று விவாதத்தில் ஈடுபட்டார்.
உடனே துரைமுருகன், "என்ன சொல்லுங்க?" என்று அதட்டினார். "இதெல்லாம் ரொம்ப மோசமானது. கேள்வியே கேட்கக் கூடாதா?" என்றார் வேல்முருகன்.

இதனிடையே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "தம்பி வேல்முருகன் நீங்க இப்போது அனுமதியின்றி பேசுறதுதான் மோசமானது. நீங்கள் கேட்ட கேள்வியும் சரியானதுதான், அவர் சொன்ன பதிலும் சரியானதுதான். தேவையற்ற விவாதம் வேண்டாம் உட்காருங்கள். இப்போது உங்களுக்குப் பேச அனுமதியில்லை. உங்கள் நேரத்தில் பேசவும்" என்று ஆஃப் செய்துவிட்டார்.